உலகளாவிய பெருந்தொற்றுநோயான கோவிட்-19 பரவல் காரணமாக முகக்கவசம், கிருமி நாசினிகளின் பயன்பாடு என்பது மக்களிடையே அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் நாள்தோறும் புதுப்புது கண்டுபிடிப்புகள் வெளிவந்துகொண்டே இருக்கிறது.
அந்த வகையில், கரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயன்படுத்தப்படும் கிருமிநாசினி பயன்பாட்டை எளிமையாக்கும் வகையில் கை கடிகார வடிவிலான கருவி உள்ளிட்ட மூன்று நவீன உள்நாட்டு தயாரிப்புகளை கோவையைச் சேர்ந்த ரோபோடிக்ஸ் நிறுவனம் உருவாக்கியுள்ளது.
கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இன்று அதன் நிர்வாக இயக்குநர் ஜோதிமுருகன் அறிமுகப்படுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ எனது மகன் ப்ரனவ்வின் எண்ணத்தில் இருந்துதான் இந்த மூன்று கருவிகளை உருவாக்க வேண்டுமென்ற சிந்தனை எனக்கு உருவானது. கை கடிகார வடிவிலான சிறு கருவின் பெயர் ‘பிரஸ் இட்’ ஆகும். இதில் 15 மி.லி கிருமிநாசினி நிரப்பி பயன்படுத்தலாம். இதனை ஒருமுறை அழுத்தினால் 1மி.லி கிருமி நாசினி வெளியேறும்.
இரண்டாவது கருவியின் பெயர் ப்யூர்மணி. இது பண தாள்களை சுத்தம் செய்ய கண்டுபிடிக்கப்பட்டது. இதில் 300 மி.லிவரை கிருமிநாசினியை நிரப்பலாம். அதன் மூலமாக 1500 முறை பண தாளை சுத்தம் செய்துகொள்ள முடியும்.
ப்யூர்மணி பிளஸ் என்ற மூன்றாவது கருவியும் பணத்தை சுத்தம் செய்வதற்காக கண்டுபிடிக்கப்பட்டது தான். இதில் ஒரு வழியாக பணத்தை செலுத்தி சுத்தம் செய்ய முடியும். இது வங்கிகளில் பணம் செலுத்தும் இயந்திரங்களின் பயன்பாட்டிற்காக கண்டுபிடிக்கப்பட்டது. வங்கிகள் மட்டுமல்லாது, தேவைப்பட்டால் தனிநபர்கள்கூட பயன்படுத்தலாம். பிரஸ் இட் 399 ரூபாய்க்கும், ப்யூர்மணி 4999 ரூபாய்க்கும் ப்யூர்மணி பிளஸ் 5999 ரூபாய்க்கும் ஆன்லைனின் விற்பனை செய்யப்படுகிறது” என்றார்.
இதையும் படிங்க : புத்தாண்டு கொண்டாட்டம் ஊட்டியில் தடை விதிப்பு: மீறினால் கடும் நடவடிக்கை