கரோனா பரவல் காரணமாக தமிழ்நாட்டில் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பல திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் கரோனாவை ஒழிக்கும் கடவுளாக 'கரோனா தேவி' என்ற பெயரில் புதிய கடவுள் சிலையை உருவாக்கி வழிபட்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் இருகூர் பகுதியில் உள்ள காமாட்சிபுரி ஆதீனம் 51 சக்தி பீடத்தில் இந்த கரோனா தேவி சிலையை வழிபாட்டுக்காக நிறுவியுள்ளது. கருங்கல்லால் உருவாக்கப்பட்ட இந்த சிலைக்கு நாள்தோறும் அலங்காரம், ஆரத்தி, அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.
இதுகுறித்து காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் கூறுகையில், "கரோனா வைரஸ் என்னும் கிருமியால் மனித வாழ்க்கை சீர்குலைந்துவிட்டது. அம்மை நோய், காலரா ஏற்பட்ட போது மக்கள் பல உயிர்களை இழந்தனர். திக்கற்றவர்க்கு தெய்வமே துணை என்ற வாக்கின்படி கிராமங்களிலே மாரியம்மன், மாகாளியம்மன், பிளேக் மாரியம்மன் என்ற வழிபாட்டினை ஏற்படுத்தினர்.
வேப்பிலை கும்பங்களும் நடுகற்களும் வைக்கப்பட்டு வழிபட்ட இடம், பிற்காலத்தில் கோயிலாக மாறியது. இதற்காக எழுதப்பட்ட சாஸ்திரங்கள் எதுவும் இல்லாவிட்டாலும் மக்களாக ஏற்படுத்திய வழிபாடாகும். கரோனா தேவி சிலை வடிவமைக்கப்பட்டு 48 நாள் மகா யாகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த யாகத்துக்கு பக்தர்கள் யாருக்கும் அனுமதி இல்லை. ஆலய பணியாளர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். இன்று பழமை வாய்ந்த கிராமங்களில் மாரியம்மன், மாகாளியம்மன் இருப்பது போல இந்த கொரோனா தேவி வழிபாடும் அவசியமாகிறது” என்றார்.
ஏற்கனவே பொதுமக்களின் அறியாமையால்தான் கரோனா தொற்றின் முதல் அலை இரண்டாவது அலையாக உருவெடுத்துள்ளது. இனி மூன்றாவது அலையாகவும் உருவெடுக்க வாய்ப்புகள் உள்ளன. இந்த நேரத்தில் இது போன்ற மூடநம்பிக்கைகள், மாட்டு மூத்திரம் சாப்பிட்டால் கரோனா வராது என்று சொல்வதற்கு ஈடானது.
இதையும் படிங்க;
'கரோனாவுக்கு போட்டியாக புதிய நோய்' - கொள்ளை நோயான மியூகோர்மைகோசிஸ்