கோயம்புத்தூர்: காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி, கோவை காளப்பட்டி சாலையில், சிறு குறு தொழில் நிறுவன உரிமையாளர்களைச் சந்தித்து கலந்துரையாடினார்.
அப்போது அவர் பேசும்போது, “தொழில்துறையில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) முக்கிய பங்கு வகிக்கின்றது. பெரிய தொழில் நிறுவனங்கள், சிறு குறு தொழில் நிறுவனங்கள் என அனைத்தும் ஜிஎஸ்டியால் பாதிக்கப்பட்டுள்ளன. ஜிஎஸ்டி மாற்றியமைக்கப்பட வேண்டும். வரி குறைப்பு செய்ய வேண்டும். நாங்கள் ஜிஎஸ்டியை நம்பவில்லை. வட்டி குறைப்பை அமல்படுத்த சரியான திட்டம் எங்களிடம் இருக்கின்றன.
மக்களை புரிந்துகொண்டு அரசு செயல்பட வேண்டும். ஆனால் பாஜக இதை புரிந்து கொள்ளமாட்டார்கள். அவர்களுக்கு, இந்த பிரச்னையில் நடவடிக்கை எடுக்க தெரியவில்லை. வங்கி அமைப்புகள் பெரும் முதலாளிகளுக்கு சாதகமாக அமைக்கப்பட்டுள்ளன.
அரசின் பொருளாதார நடவடிக்கை சிறுகுறு தொழில் முனைவோரை பாதிக்கின்றது. பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும் நாடுகள் சிறுகுறு தொழில் முனைவோரை பாதுகாக்க, நல்ல பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. பாஜக அரசு, நம் நாட்டின் சிறு குறு நிறுவனங்களுக்கு அதனை செய்யவில்லை” என குற்றஞ்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், “இந்தியாவில் பெட்ரோல் விலை ஏறிக்கொண்டு போகின்றது. இது தொழிலாளர்களை பெரிதளவில் பாதிக்கின்றது. இது காங்கிரஸ் ஆட்சி வந்தால் மட்டுமே குறையும். நம் பொருளாதார ரீதியாக சிறுகுறு தொழில் நிறுவனங்களை வைத்து சீனாவின் பொருளாதாரத்தை மிஞ்சிவிட முடியும். அதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்ளாமல், வரி உள்ளிட்ட சலுகைகளால், உங்கள் கைகளை கட்டி வைத்துள்ளனர். அதை தகர்த்தால் சிறுகுறு தொழில்கள் வெற்றி பெற முடியும். இதுவும் காங்கிரஸ் ஆட்சியில் நடைபெறும்” என்றார்.