கோவை மாவட்டம் தடாகம் பகுதியில் செயல்படும் செங்கல் சூளைகளால் கனிமவளங்கள் கொள்ளையடிக்கப்படுவதாகக் கூறி, தடாகம் பள்ளத்தாக்கு கனிமவள பாதுகாப்புக் குழு சார்பில் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தடாகம் பகுதியில் மகேஸ்வரி என்பவர் இடத்தில் மண் எடுத்த லாரியை சமூக ஆர்வலர் கணேஷ் என்பவர் தடுத்துள்ளார். அவரை தாக்கிவிட்டு செங்கல் சூளை உரிமையாளர்கள் லாரியை மீட்டுச் சென்றிருக்கின்றனர். பின்னர் செங்கல் சூளை உரிமையாளர்கள் அளித்த புகாரின் பேரில் கணேஷ், ராஜேந்திரன் உட்பட 7 பேர் மீது வழக்குப் பதியப்பட்டது.
இந்நிலையில், நேற்றிரவு கணேஷின் இல்லத்திற்கு சென்ற 50க்கும் மேற்பட்டவர்கள், வீட்டின் ஜன்னலை உடைத்து தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, கொலை மிரட்டல் விடுத்ததாக, சமூக ஆர்வலர்கள் கணேஷ் மற்றும் ராஜேந்திரன் குடும்பத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
அப்போது பேசிய ராஜேந்திரனின் மகன் சுஜீந்திர கவுடா, ” செங்கல் சூளையை எதிர்த்து தனது தந்தை ஓராண்டிற்கு முன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அன்றிலிருந்து தொடர்ந்து அச்சுறுத்தி வருகின்றனர். அரசு அதிகாரிகளும் சூளை உரிமையாளர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. வழக்கு இறுதி கட்டத்தில் இருப்பதால் வழக்கை திரும்பப் பெற வலியுறுத்தி எங்களது வீட்டு ஜன்னல்களை கற்களால் தாக்கி உடைத்துள்ளனர் “ என்றார்.
இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக சமூக ஆர்வலர்கள் பரமேஷ்வரன், மாணிக்கராஜ் ஆகிய இருவரையும் ஜனவரி 11 ஆம் தேதி வரை பொள்ளாச்சி கிளைச் சிறையில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சென்னையில் கொள்ளையடித்த நபர் ஹைதராபாத்தில் கைது