பொள்ளாச்சி: இரண்டு வார அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள காவென்வெல்த் பொதுச் செயலாளர் பட்ரிசியா ஸ்காட்லாந்த், காவேரி கூக்குரல் இயக்கத்தின் வழிகாட்டுதலில் பொள்ளாச்சியில் செயல்படும் வள்ளுவன் வேளாண் காட்டை பார்வையிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ‘மண் காப்போம் இயக்கத்தின் வழிமுறைகளும் காமென்வெல்த் அமைப்பின் ‘வாழும் நிலங்கள் ஒப்பந்தமும்’ (Living Lands Charter) ஒன்றோடு ஒன்று ஒத்து போக கூடியவை. பூமியின் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக நாங்கள் இம்முயற்சியை மேற்கொண்டு வருகிறோம்.
குறிப்பாக பருவநிலை மாற்றம் உலகிற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. காமென்வெல்த் குடும்பத்தில் மொத்தம் 56 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. அதில் 26 நாடுகள் கடலை ஒட்டியுள்ள சிறு தீவுகளாக உள்ளன. பருவநிலை மாற்றத்தால் கடல் மட்டம் உயர்ந்து கொண்டே வருகிறது. இதை தடுக்க நாம் இப்போது செயல்படாவிட்டால், தீவு நாடுகள் கடலுக்குள் மூழ்கும் அபாயம் உள்ளது. எனவே நாம் வாழும் நிலத்தை பாதுகாக்க இயற்கையான வழிமுறைகளை நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம் என தெரிவித்தார்.
மேலும் கூறுகையில், ‘இந்த ஆய்வின் ஒரு பகுதியாக, காவேரி கூக்குரல் இயக்கத்தின் வழிகாட்டுதலில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வேளாண் காட்டிற்கு வந்து பார்வையிட்டுள்ளேன். இதை வடிவமைத்துள்ள விவசாயியின் உறுதியை நான் மனதார பாராட்டுகிறேன். தற்போது உலகம் முழுவதும் பெரும்பாலான விவசாயிகள் ஒற்றை பயிர் முறையில் விவசாயம் செய்து வருகின்றனர்.
நீண்ட கால விவசாயத்திற்கு இந்த முறை ஒத்து வராது. ஆனால், இந்த நிலத்தின் உரிமையாளர் வள்ளுவன் தென்னை மரங்களுக்கு இடையில், ஜாதிக்காய், வாழை, டிம்பர் மரங்கள் என பல பயிர் விவசாயம் செய்து வருகிறார். இதனால், இங்கு பல்லுயிர் பெருக்கம் அதிகரித்துள்ளது. களைகளும் இல்லை. இது போன்ற விவசாய வழிமுறைகளை உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் என தெரிவித்தார்.
ஈஷாவின் வழிகாட்டுதல்: காவேரி கூக்குரல் இயக்கத்தின் திட்ட இயக்குநர் ஆனந்த் பேசுகையில், “ஈஷாவின் வழிகாட்டுதலில் இந்த வேளாண் காட்டை வள்ளுவன் உருவாக்கி உள்ளார். 12 ஆண்டுகளுக்கு முன்பு இந்த காட்டை வடிவமைக்க தொடங்கும் போது இங்குள்ள மண்ணின் கரிம வளம் 0.86 சதவீதமாக இருந்தது. ஆனால், கடந்தாண்டு ஆய்வு செய்து பார்த்த போது, கரிம வளம் 5.67 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது சாதாரண விஷயம் அல்ல.
காட்டில் இயற்கையாக இதுபோன்று மண் வளம் அதிகரிக்க வேண்டுமானால், 50 முதல் 100 ஆண்டுகள் ஆகும். ஆனால், வள்ளுவன் மரம் சார்ந்த விவசாய முறையின் இதை சாத்தியமாக்கி காட்டியுள்ளார். அவரின் வருமானமும் 8 மடங்கு அதிகரித்துள்ளது விளைச்சலும் பல மடங்கு அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் விவசாய நிலங்களில் மண்ணின் வளத்தை குறைந்தப்பட்சம் 3 முதல் 6 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்பதே மண் காப்போம் இயக்கத்தின் மிக முக்கியமான அம்சமாகும். அதை இங்கு செயல்படுத்தி காட்டியுள்ளோம். இதை மண் காப்போம் இயக்கத்தின் மூலம் உலகம் முழுவது கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளோம்.” என்றார்.
இந்தப் பயணத்தில் ஈஷாவின் வழிகாட்டுதலில் லாபகரமாக விவசாயம் செய்து வரும் முன்னோடி விவசாயிகளுடன் காமென்வெல்த் பொதுச் செயலாளர் கலந்துரையாடினார். உலகம் முழுவதும் மண் வளத்தை மேம்படுத்துவதற்காக சத்குரு தொடங்கியுள்ள ‘மண் காப்போம்’ இயக்கத்திற்கு 56 காமென்வெல்த் நாடுகள் ஏற்கனவே ஆதரவு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:இந்தியாவில் 5G காத்திருப்பு முடிந்துவிட்டது... பிரதமர் மோடி...