சர்வதேச யோகா தினம் இன்று உலகம் முழுவதிலும் கொண்டாடப்படுகிறது. அதன்படி, நாமக்கல் தெற்கு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் யோகாசனம் செய்யும் நிகழ்ச்சியை மாவட்ட செயலாளர் குடும்பநல நீதிமன்ற நீதிபதி பாலசுப்பிரமணியம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
தருமபுரியில் ஆயுதப்படை மைதானத்தில் காவலர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். இப்பயிற்சியை தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை யோகா, இயற்கை வாழ்வியல் மருத்துவர் ரமேஷ்பாபு பயிற்றுவித்தார். இதனைத் தொடர்ந்து 200க்கும் மேற்பட்ட காவலர்கள் யோகா பயிற்சி செய்தனர்.
இதேபோல், கரூர் மாவட்டம் காந்திகிராமம் பகுதியில் இருக்கக்கூடிய புனித தெரசா மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் யோகாசனம் செய்தனர். அவர்களுடன் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு யோகாசனம் செய்தார்.