கோவை மாவட்டம் பொள்ளாச்சியின் புகழ்பெற்ற சுற்றுலா தலமான வால்பாறைக்கு கேரளாவிலிருந்து தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது கோடைக்காலம் என்பதால் வால்பாறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். ஆனால் நாடு முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அனைத்து மாநில சுகாதாரத் துறையினரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக வால்பாறை - சாலக்குடி சாலையிலுள்ள அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சி, வாளைச்சால் ஆறு ஆகிய சுற்றுலா தலங்களை நேற்று முன்தினம் முதல் கேரள அரசு மூடியுள்ளது. இதனைத் தொடர்ந்து கேரளாவிலிருந்தும் வால்பாறைக்குச் செல்ல சுற்றுலா பயணிகள் வால்பாறை சாலக்குடி சாலையை பயன்படுத்த கேரள வனத்துறை தடை விதித்துள்ளது.
கேரளா - தமிழ்நாடு எல்லையிலுள்ள மழுக்கப்பாறை சோதனைச் சாவடியில் வாகன ஓட்டிகளுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகிறது. மழுக்கப்பாறை, சோலையார் அணை, வால்பாறை பகுதிகளில் சுற்றுலா வியாபாரம் பெரிதும் பாதிப்படைந்துள்ளது.
இதன் காரணமாக வால்பாறையில் உள்ள காட்டேஜ்கள், ஹோட்டல்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. கேரளாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வரும் அரசுப் பேருந்து, அவசர கால வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களுக்கும் நோய் பரவாமல் இருக்க கிருமி நாசினி மருந்து தெளித்து அனுப்பப்படுகின்றன.
இதையும் படிங்க: கரோனா பாதுகாப்பு: மதுரை அரசு போக்குவரத்துக் கழகம் அதிரடி நடவடிக்கை