சாலை விதிமீறல்களில் ஈடுபடும் வாகனஓட்டிகளுக்கு போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். காவல்துறையினர் விதிமீறல்களில் ஈடுபட்ட வாகன ஓட்டுநர்களிடம் அபராதம் விதித்து, தொகையைச் சம்பவ இடத்திலேயே வசூலித்து, ரசீது வழங்கி வருகின்றனர்.
இந்த நடைமுறையை மேலும் எளிமைப்படுத்தும் வகையில், மேற்கண்ட முறை கணினி மயமாக்கப்பட்டுள்ளது. இதற்காகத் தமிழ்நாடு காவல்துறை நிர்வாகத்தினர், பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைந்து தமிழகம் முழுவதும் 750 மின்னணு கருவிகளை, காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம் மூலமாக வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இனி சம்பவ இடத்தில் அபராதம் விதிக்கும் போது, கடன் அட்டை(கிரெடிட் கார்டு), சேமிப்பு அட்டை (ஏடிஎம் கார்டு) மூலம் விதிமீறல்களில் ஈடுபட்ட வாகன ஓட்டுநர்கள் அபராத தொகையை மின்னணு முறையில் செலுத்தலாம். இதன் மூலம் தொடர் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்களையும் எளிதாகக் கண்டறியமுடியும்.
இதன் தொடர்ச்சியாக, கோவை சரகத்துக்கு 119 எண்ணிக்கையிலான சம்பவ இடத்திலேயே அபராதம் விதிக்க உதவும் மின்னணு கருவிகள் ஒதுக்கப்பட்டன. இதில், கோவை மாநகருக்கு 32 கருவிகள், திருப்பூர் மாநகருக்கு 4 கருவிகள், கோவை மாவட்டத்துக்கு 14 கருவிகள், ஈரோடு மாவட்டத்துக்கு 30 கருவிகள், நீலகிரி மாவட்டத்துக்கு 12 கருவிகள், திருப்பூர் மாவட்டத்துக்கு 32 கருவிகள் என பிரித்து வழங்கப்பட்டது.
கோவை சரகத்தில் இக்கருவியைப் போக்குவரத்து காவல்துறையினருக்கு நேற்று கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் கார்த்திகேயன் விநியோகித்து அபராதம் விதிக்கும் முறையைத் தொடங்கி வைத்தார். காவல்துறை துணைத்தலைவர் அலுவலகத்தில் நடந்த இந்நிகழ்வில் காவல் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.