லஞ்ச ஒழிப்பு வாரம் அக். 27ஆம் தேதி முதல் நவம்பர் 2ஆம் தேதி வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இன்று லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் கோவை மாநகராட்சி ஊழியர்கள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். கோவை மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை நடைபெற்ற இந்த ஊர்வலத்தை மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த ஊர்வலத்தில் மாநகராட்சி ஊழியர்கள் "லஞ்சம் வாங்க கூடாது, லஞ்சம் வாங்கியவர்கள் நிம்மதியாக உறங்கியது இல்லை" என்ற பதாகைகளை ஏந்தியவாறு கலந்துகொண்டனர். அதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையர், "ஊழல் இல்லாத நிர்வாகத்தை வழங்க வேண்டும் என்பதற்காக இந்த விழிப்புணர்வுப் பேரணி நடைபெறுகிறது.
தீபாவளிப் பண்டிகையையொட்டி பல்வேறு இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படும் என்பதால், மாநகராட்சி சார்பில் தனிக் குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும். அந்தக் குழுவின் மூலம் முகக்கவசம் அணியாமல் இருந்தாலோ, சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் இருந்தாலோ அந்தக் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும். அதை மீறியும் அரசு கூறிய விதிமுறைகளை பின்பற்றாமலும் இருந்தால் அந்தக் கடைகளை ஓரிரு நாட்கள் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்படும்" என்றும் தெரிவித்தார்.