கோயம்புத்தூர்: சூலூர் கண்ணம்பாளையம் அருகே தனியாருக்குச் சொந்தமான பஞ்சு ஆலை இயங்கி வருகிறது. இங்கு வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் 500க்கும் மேற்பட்டோர் தங்கி, பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று (ஆக.23) இரவுப் பணி நேரத்தில் இருந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞருக்கும், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த இளைஞருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு, பின்னர் கைகலப்பாக மாறியது.
இளைஞர்கள் மோதல்
இதனையறிந்த விடுதியில் தங்கியிருந்த இரு மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்று சேர்ந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
இதில், 10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். இதனைக் கண்ட ஆலையின் நிர்வாகத்தினர், உடனடியாக சூலூர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.
போலீஸ் விசாரணை
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், இந்த அடிதடி சம்பவத்திற்கு காரணமான இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இந்த அடிதடியில் பலத்த காயமடைந்த இளைஞர்கள் 10 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: காவல் நிலையத்தில் வழக்கறிஞர்கள் மோதல் - வழக்காட தடை