கோயம்புத்தூர்: கவுண்டம்பாளையம் பகுதியில் காணொலி பரப்புரையில் மக்களை சந்தித்துப் பேசிய முதலமைச்சர், 'கரோனா காரணத்தினால் இவ்வகை காணொலி பரப்புரை நடைபெறுகிறது. உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு பிறந்தநாள் தினத்தில் இந்த பரப்புரையைத் தொடங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது.
நாராயணசாமியின் முக்கியக் கோரிக்கையான நான்கு கோரிக்கைகளான விவசாயிகளுக்கு கட்டணமில்லா மின்சாரம், விவசாயக் கடன் ரத்து, வேளாண் பொருட்களுக்கு உரிய விலை, வேளாண் தொழிலை அங்கீகரித்தல் ஆகியவற்றை திமுக அரசு நிறைவேற்றி உள்ளது.
பத்து ஆண்டு காலம் இருந்த ஆட்சியை வீழ்த்தி நம்மை மக்கள் ஆட்சியில் அமர வைத்து உள்ளார்கள். 5 ஆண்டு காலத்தில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தான் நல்ல ஆட்சிக்கு உதாரணம். நம்முடைய ஆட்சி அமைந்த ஓராண்டுக்குள்ளேயே மக்களின் கோரிக்கைகளில் முக்கால்வாசிக்கும் மேல் நிறைவேற்றி உள்ளது.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத்தேர்தலில் வெற்றி பெற்றது போலவே, நடைபெற இருக்கின்ற உள்ளாட்சித் தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும். கோவையில் சிறு, குறு தொழில்களுக்குத் தேவையான அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படும்.
கொங்கு வேளாளர் மக்களைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது யார்...?
கோவை பகுதியில் உள்ள கொங்கு வேளாளர் மக்களைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்ததும் திமுக அரசு தான். கோவையில் திமுக ஆட்சியில் இன்னுயிர் திட்டத்தின்கீழ் 620 உயிர்களைக் காத்துள்ளோம். 128 இடங்களில் சாலை புதுப்பித்தலுக்காக அடிக்கல் நாட்டுதல், 3 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தியது போன்ற பல்வேறு முத்தாய்ப்பான சாதனைகளை சொல்லிக் கொண்டே போகலாம்.
மருத்துவ நுழைவுத் தேர்வாக நீட் தேர்விற்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். கடந்த ஆட்சியில் ஒன்றிய அரசு திரும்ப அனுப்பிய நீட் மசோதாவை அதிமுக அரசு வெளியில் சொல்லாமல் மூடிவிட்டது. எனவே, இம்முறை உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் தங்கள் பொன்னான வாக்குகளை திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு வழங்க வேண்டும்' எனக் கூறினார்.
முதலமைச்சர் உரைக்கு முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவை மாவட்ட திமுக நிர்வாகிகளாக கார்த்திக், பொங்கலூர் பழனிச்சாமி, வரதராஜன், பையா கிருஷ்ணன் ஆகியோர் உள்ளாட்சித் தேர்தலில் கோவையில் முழுமையான வெற்றியைப் பெற்றுத் தருவோம் என உரையாற்றினர்.
இதையும் படிங்க: முதற்கட்ட தேர்தல் பரப்புரையைத் தொடங்கிய அன்பில் மகேஷ்!