கோயம்புத்தூர்: காந்திபுரம் பகுதியில் கடந்த நான்கு ஆண்டுகளாக செந்தில்குமார் (53) என்பவர் விஜய் மேன்ஷன் என்ற பெயரில் தங்கும் விடுதி நடத்தி வருகிறார்.
இவர், 2017ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மீனா எஸ்டேட் பகுதியில் வசித்து வந்த பாஸ்கரன் என்பருக்கு ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் கடன் கொடுத்ததாக கூறப்படுகிறது. கடன் தொகையை திருப்பி செலுத்தாமல் இருந்து வந்த பாஸ்கரன், 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து பாஸ்கரனின் சகோதரரான சுதாகரன், செந்தில்குமார் தான் பாஸ்கரனை தற்கொலைக்கு தூண்டியதாக பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் சுதாகரன், தொலைபேசியிலும், வாட்ஸ்அப் மூலமாகவும் தனது அண்ணன் தற்கொலைக்கு மேன்ஷன் உரிமையாளரான செந்தில்குமார் தான் காரணம் என கூறி அவரை மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த ஒன்றாம் தேதி இரவு 11 மணியளவில் செந்தில்குமாரின் விடுதிக்கு அரிவாளுடன் வந்த சுதாகரன், அங்கிருந்த விடுதியின் பெயர் பலகையை வெட்டி சேதப் படுத்தியதுடன், பணியிலிருந்த காவலாளியை மிரட்டிவிட்டு காரில் ஏறி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
இந்தக் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு விடுதி உரிமையாளர் செந்தில்குமார் அளித்த புகாரின் பேரில் காட்டூர் காவல் துறையினர் சுதாகரன் மீது கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: Cultural Revolution Madurai: நன்னெறியில் வாழ்வோருக்கு அந்தணர் பட்டம் - மதுரையின் பண்பாட்டுப் புரட்சி