கோயம்புத்தூர் தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து இருசக்கர வாகன பேரணி இன்று (மார்ச் 27) நடத்தப்பட்டது. தேர் நிலை திடலில் இருந்து தெப்பக்குளம் மைதானம்வரை நடைபெற்ற இந்தப் பேரணியில் சுமார் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர். அதற்கு முன்புறமாக வந்த பெண்கள் நடனமாடியும் கோஷங்களை எழுப்பியும் நடந்து வந்தனர்.
இதில் ஒப்பணக்கார வீதி பகுதியில் இருந்து தெப்பக்குளம்வரை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி இருசக்கர வாகன பேரணியில் கலந்துகொண்டார். இந் பேரணியில் அமைச்சர் ஸ்மிருதி இரானியை தவிர்த்து மற்ற எவரும் சரியாக முகக்கவசம் அணியாமலும் தலைக்கவசம் அணியாமலும் கலந்துகொண்டனர்.
அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், வாகனத்தை இயக்கும்போது கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று அரசு அறிவித்திருக்கும் நிலையில் அதனை ஆளும் கட்சியினர் மட்டும் கடைபிடிக்க மாட்டார்களா? என்று எதிர்க்கட்சியினரும் பொதுமக்கள் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும், நிலை திடல் பகுதியில் காவல் துறையினர் போக்குவரத்தை வேறு பாதைக்கு திருப்பிவிடாமல் இருந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இதையும் படிங்க: கமல் ஹாசனை விவாதத்திற்கு அழைத்த ஸ்மிருதி இரானி