அண்மையில் பாஜகவில் இணைந்த முன்னாள் ஐபிஎஸ் அலுவலர் அண்ணாமலை, கோவை காந்திபுரத்தில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு வந்தார். அவரை வரவேற்க பாஜகவினர் கூட்டமாக திரண்டிருந்தனர். ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்த நேரத்தில், இப்படிக் கூட்டம் கூடியதைப் பலரும் விமர்சித்திருந்தனர்.
இந்நிலையில், தடையை மீறி கூட்டம் கூட்டியதற்காகவும், கரோனாவைப் பரப்பும் வகையில் நடந்து கொண்டதாகவும், அண்ணாமலை உள்ளிட்ட ஐந்து பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவ்வழக்கு குறித்து கருத்துத் தெரிவித்து பாஜக மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், காட்சிப்பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "தமிழ்நாடு அரசியலில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்று அரசியலுக்கு வந்த அண்ணாமலையை சகித்துக் கொள்ள முடியாதவர்கள், கரோனாவை பரப்பச் செய்ததாகக் கூறி, வழக்குப்பதிய வைத்துள்ளனர்.
தற்போது போடப்பட்டுள்ள வழக்கு அண்ணாமலையைப் பயமுறுத்தவா? அல்லது பாஜகவை பயமுறுத்தவா? என்பது போகப்போகத்தான் தெரியும். கோவையில் ஒரு அமைச்சரின் இல்லத் திருமண விழாவில் இதே மாதிரியான விதிமுறைகள் பின்பற்றப்பட்டதா? திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் அமைச்சர்களின் கூட்டங்களில் இந்த விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா?
எந்த விதமான வழக்குகளும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது. இனி, வருகின்ற காலம் பாஜகவின் காலம் என்பதை நிரூபிக்க, இது போன்ற வழக்குகளே முன்னோடியாக இருக்கிறது " என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பாஜகவில் இணைந்த முன்னாள் ஐபிஎஸ் அண்ணாமலை மீது வழக்குப் பதிவு!