இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோயம்புத்தூரில் மாகாளியம்மன் கோயில், விநாயகர் கோயில், சங்கமேஸ்வரர் கோயில், செல்வவிநாயகர் கோயில் என நான்கு கோயில்கள் முன்பாக டயர்களை எரித்து நாச வேலையை செய்தது, கோயில் முன்பாக மக்கள் வணங்கும் சூலாயுதம் போன்றவற்றை சேதப்படுத்துவது என, நடந்த சம்பவங்கள் மிகுந்த மனவேதனை அளிக்கிறது.
இந்து வழிபாட்டுத் தலங்கள் மீது நடைபெற்ற தாக்குதல் சம்பவங்கள் தமிழ்நாட்டில் இருக்கும் கோடிக்கணக்கான பக்தர்கள் உணர்வுகளின் மீது நடைபெறும் தாக்குதலாகவே கருதுகிறேன். கோயில்களுக்கு மக்கள் இறைவழிபாட்டிற்கு வருவதை தடுத்திட அல்லது அச்சத்தை ஏற்படுத்த இவை நடைபெற்றதா? இல்லை என்றால் கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்துவோம், தமிழ் கடவுள் முருகனை அவமதிப்போம் உங்களால் என்ன செய்ய முடியும் என்ற ஆணவப்போக்கா? எப்படி என்றாலும், இது ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்திற்குச் செய்யும் நம்பிக்கை துரோகம் ஆகும்.
இந்து மதத்தை பின்பற்றி கடவுளை வணங்கும் 90 விழுக்காடு மக்கள் வாழும் தமிழ்நாட்டிலேயே இந்நிலையா? இது போன்ற தவறுகள் செய்தவர்களை மட்டுமின்றி இந்த சதிச் செயலுக்கு பின்னாலிருந்து ஊக்கப்படுத்தும் தீய சக்திகளுக்கும், பொது அமைதிக்கும் சட்டம் ஒழுங்கிற்கும் ஊறு விளைவிக்கும் அமைப்புகளுக்கும் தக்க தண்டனை வழங்கப்பட வேண்டும்.
இந்த நிகழ்வு தொடர்பாக, சேலம் மாவட்டம் பள்ளப்பட்டி சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் கைது செய்துள்ளதாகத் தெரிகிறது. இவரை பார்க்கும்போது, இவர் ஒருவரே 4 கோயில்களிலும் டயர்களை எரித்து, கோயிலை சேதப்படுத்தி இருப்பாரா என்ற சந்தேகம் எழுகிறது.
இவருடன் சென்ற கும்பல் யார் யார் இருக்கிறார்கள் என்பதை முழுமையாக கண்டறிய வேண்டும். போலி மதசார்பின்மை பேசி மக்களை ஏமாற்றும் அரசியல் கட்சிகளை மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள், தக்க சமயத்தில் அவர்களுக்கு மக்கள் தீர்ப்பு அளிப்பார்கள்" என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:புதுக்கோட்டையில் 30 ஆயிரம் மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல்