மத்திய அரசின் வேளாண் சட்டங்களில் உள்ள நன்மைகள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்கும் வகையில் பாஜக சார்பில், கோவையில் டிராக்டர் ஊர்வலம் நடைபெற்றது. இதனை அக்கட்சியின் மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன், கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ” டெல்லியில் போராட்டம் என்ற பெயரில் அப்பாவி விவசாயிகளின் வாழ்க்கையோடு எதிர்க்கட்சிகள் விளையாடுகின்றன. தேர்தல் அறிக்கைகளில் எதிர்க்கட்சிகள் சொல்லியதையே மோடி இன்று சட்டமாக்கியிருக்கிறார்.
விவசாயிகள் விளைவித்த பொருளுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்பதற்காகவே, இந்த சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. திடீரென பச்சைத் துண்டு போட்டுக் கொண்டு வருபவர்களை விவசாயிகள் நம்ப மாட்டார்கள். கட்சி தொடங்கி கரோனா காலத்தில் மக்களுக்கு எதுவும் செய்யாத கமல் ஹாசன், பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
தொண்டாமுத்தூர் பகுதியில் திராட்சை மற்றும் சின்ன வெங்காயம் அதிகமாக விளைவிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 50 ஆண்டுகளாக குளிர்பதனக் கிடங்குகள் இல்லாததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தவிர்க்க குளிர்பதனக் கிடங்குகளை அம்பானி அதானி என யார் வேண்டுமானாலும் அமைக்கலாம் “ என்றார்.
இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட இளம் பெண்களிடம், ஊர்வலம் குறித்து நாம் கேட்டபோது, டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இந்த ஊர்வலம் நடத்தப்படுவதாக அவர்கள் தெரிவித்ததும் அங்கிருந்தவர்கள் அதிர்ந்து போனார்கள். எதற்காக இந்த பிரச்சாரம் என சொல்லாமலேயே பல பகுதிகளிலிருந்தும் பெண்களை பாஜகவினர் அழைத்து வந்திருப்பதாக அங்கிருந்தவர்கள் சிரித்தபடி சென்றனர்.
இதையும் படிங்க: எதிர்க்கட்சிகள் சதியில் விவசாயிகள் விழுந்து விடக்கூடாது - ஜி.கே.வாசன்