கோயம்புத்தூர்: கோவை சரக வனத்துறையினர் தடாகம் பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் இன்று (நவ.23) அதிகாலை யானைகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வனப்பகுதியை ஒட்டிய சாலையில் வேகமாக வந்துகொண்டிருந்த செங்கல் ஏற்றி வந்த லாரி வனத்துறையின் ஜீப்பை உரசியவாறு வேகமாகச் சென்றது.
இதனையடுத்து சந்தேகமடைந்த வனத்துறையினர்3 கிலோ மீட்டர் துரத்திச்சென்று, சாலையில் ஜீப்பை நிறுத்தி லாரியை நிறுத்த முயன்றனர். ஆனால் வேகமாக வந்த லாரி ஓட்டுனர் ஜீப் மீது மோதி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.
லாரி மோதியதில் ஜீப்பிலிருந்த வேட்டை தடுப்பு காவலர் ஒருவர் காயமடைந்தார். ஜீப்பிலிருந்த மற்ற ஊழியர்கள் கீழே இறங்கியதால் காயமின்றி உயிர் தப்பினர்.
இது குறித்து தடாகம் காவல்துறைக்கு வனத்துறையினர் தகவல் அளித்ததைத் தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் லாரியை கைப்பற்றி காவல்நிலையம் எடுத்துச்சென்றனர். மேலும், லாரியை ஒட்டி வந்தவர் யார், எந்த செங்கல் சூளையிலிருந்து செங்கல் கடத்தி வரப்பட்டது என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுச்சூழலைப் பாதிக்கும் செங்கல் சூளைகள் இயங்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில், மூடப்பட்ட செங்கல் சூளைகளிலிருந்து இரவு நேரத்தில் சட்டத்திற்கு புறம்பாகச் செங்கல் கடத்தி செல்வது தொடரும் நிலையில், வனத்துறையினர் மீது லாரி ஏற்றி கொலை முயற்சியில் ஈடுபட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 'தமிழ்நாடு ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடையும்' - முதலமைச்சர் நம்பிக்கை