பொள்ளாச்சி அருகே உள்ள புளியம்பட்டியில் வசித்துவருபவர் முருகேசன். திமுக பிரமுகரான இவர் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி தொழிலையும் மறைமுகமாக செய்துவந்தார். இவர் செப்டம்பர் 21ஆம் தேதி இரவு 9 மணியளவில் புளியம்பட்டியில் உள்ள தனது வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது, வாய்க்கால் மேடு பகுதியில் கஞ்சா வியாபாரி மணிகண்டன் உட்பட நான்கு பேர் கொண்ட கும்பல் முருகேசனை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றவே நால்வரும் மறைத்து வைத்திருந்த அரிவாளால் முருகேசனை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். தலையில் காயம்பட்ட முருகேசன் வலியில் கத்தியதை கேட்டு வந்த பொதுமக்கள் முருகேசனை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மகாலிங்கபுரம் காவல் துறையினர் தப்பியோடிய நால்வர் கும்பலை வலைவீசி தேடிவந்தனர். முருகேசன் அப்பகுதியில் லாட்டரி வியாபாரம் செய்துவந்ததால், தொழில் போட்டியால் அவரை வெட்டியிருக்கக் கூடும் என்ற கோணத்திலும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், நேற்றிரவு தலைமறைவாக இருந்த மணிகண்டன், பிரகாஷ், கோவிந்தராஜ், பிரபாகரன் ஆகிய நான்கு பேரையும் காவல்துறையினர் கைதுசெய்தனர். பின், நான்கு பேரையும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.