கோயம்புத்தூர்: ரெட்பீல்டில் உள்ள இந்திய விமானப் படை கல்லூரிக்கு நாடு முழுவதிலும் இருந்து 30க்கும் மேற்பட்ட ஆண், பெண் அலுவலர்கள் பயிற்சிக்காக வந்திருந்தனர்.
இதில், டெல்லியைச் சேர்ந்த பெண் அலுவலர் ஒருவர், தன்னுடன் பயிற்சிக்கு வந்த விமானப் படை அலுவலர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக உயர் அலுவலர்களிடம் புகார் அளித்தார்.
இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படாததையடுத்து மாநகர காவல் ஆணையரைச் சந்தித்து புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த கோயம்புத்தூர் மத்திய அனைத்து மகளிர் காவல் துறையினர், விமானப் படை அலுவலர் அமிதேஷ் ஹார்முக்கை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், விமானப் படையிடமே அமிதேஷ் ஹார்முக்கை ஒப்படைக்க உத்தரவிட்டது.
இந்நிலையில் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான விமானப் படை அலுவலரை மாநகர காவல் துறையினரிடம் ஒப்படைக்கக் கோரி கோவை மத்திய அனைத்து மகளிர் காவல் துறையினர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றம், விசாரணையை அக்டோபர் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.
இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், விமானப்படை அலுவலர்கள் மற்றும் கோவை மாநகர காவல் துறையினர் ஆஜராகி தங்களின் வாதங்களை முன்வைத்தனர். இதனையடுத்து இந்த மனு மீதான உத்தரவை அக்டோபர் 23ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
இதையும் படிங்க: தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மங்கிகேப் கொள்ளையன் கைது