கோயம்புத்தூர்: வெள்ளலூர் பேரூராட்சியில் 15 இடங்களில் அதிமுக 8 இடங்களையும், திமுக 6 இடங்களையும், சுயேட்சை ஒரு இடத்திலும் வெற்றி பெற்றனர். சுயேச்சை உறுப்பினர் கனகராஜ் திமுகவில் இணைந்ததை அடுத்து, அவரை தலைவர் பொறுப்புக்கு திமுக முன்னிறுத்தியது.
கடந்த 2 முறையாக தலைவராக பதவிவகித்த அதிமுகவை சேர்ந்த மருதாசலம் மீண்டும் தலைவர் பொறுப்புக்கு போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. கடந்த 4ஆம் தேதி தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கு நடைபெற்ற மறைமுக தேர்தலின் போது இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாலும், வாக்குப்பெட்டி வெளியே வீசி எறியப்பட்டதாலும், தேர்தலை ரத்து செய்து அறிவிக்கப்பட்டது.
![வெள்ளலூர் பேரூராட்சியில் பரப்பரப்பை தாண்டி அதிமுக வினர் வெற்றி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-cbe-2a-vellalur-issue-photo-script-tn10027_26032022184524_2603f_1648300524_82.jpg)
இது தொடர்பாக அதிமுக உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தேர்தலை மீண்டும் நடத்த உத்தரவிட்டதை தொடர்ந்து, இன்று(மார்ச்.26) தேர்தல் நடத்தப்பட்ட நிலையில், காலையில் திமுக, அதிமுக உறுப்பினர்கள் பேரூராட்சி அலுவலகத்திற்கு வருகை புரிந்த போது இருதரப்பிற்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒரு தரப்பினர் கல்வீச்சில் ஈடுபட்டனர்.
![வெள்ளலூர் பேரூராட்சியில் பரப்பரப்பை தாண்டி அதிமுக வினர் வெற்றி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-cbe-2a-vellalur-issue-photo-script-tn10027_26032022184524_2603f_1648300524_422.jpg)
இதில் திமுகவை சேர்ந்த வார்டு உறுப்பினர் குணசுந்தரி என்பவரின் கணவர் செந்தில்குமாரின் தலையில் காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இதே போல் மற்றொருவருக்குக் காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து தலைவர் தேர்தல் தொடங்கிய போது, திமுக, அதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்து வாக்குவாதம் செய்ததோடு, அமளியிலும் ஈடுபட்டனர். மேலும் பாதுகாப்பிற்கு நின்றிருந்த காவல்துறையினர், திமுக உறுப்பினர்கள் 7 பேரையும் வெளியேற்றினர்.
அதன் பின் 8 அதிமுக உறுப்பினர்களின் ஆதரவுடன் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அதிமுகவின் மருதாசலம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து துணை தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தலில் அதிமுகவின் கணேசன் மட்டும் போட்டியிட்டார்.
இதனால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். இதனிடையே கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த திமுக உறுப்பினர்கள் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி, மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்சிடம் மனு அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஆர்ஆர்ஆர் முதல் நாளில் ரூ.223 கோடி வசூல்!