கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் மூன்று மதகுகளில் ஒரு மதகு நேற்று முன்தினம் இரவில் உடைந்தது. இதனால் அணையிலிருந்து 20 ஆயிரம் கனஅடி நீர் வீணாக வெளியேறி அரபிக்கடலில் கலக்கிறது. இதையடுத்து பொதுபணித்துறை அமைச்சர் துரைமுருகன் அணையின் தன்மை குறித்து ஆய்வு மேற்கொள்ள பரம்பிக்குளம் வந்தார்.
உடைந்த மதகை பார்த்து பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறும்பொழுது, எதிர்பாராத விதமாக இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது, மதகுகளை தூக்கி இறக்கும் சங்கலி அறுந்த காரணத்தால் மதகு சேதம் அடைந்துள்ளது. வெளியேறும் தண்ணீர் செல்லும் நீர்வழிதடங்களில் எவ்வித பாதிப்பு இல்லை. அணையிலிருந்து காலையில் 20 டிஎம்சி தண்ணீர் வெளியேறும் நிலையில் தற்போது 6 டி.எம்.சி தண்ணீரே வெளியேறுகிறது.
தண்ணீர் வடிந்தவுடன் மதகுகளை சீரமைக்கும் பணி தொடங்கப்படும். இதுகுறித்து சென்னை சென்று முதலமைச்சரிடம் துறைசார்ந்த அலுவலர்கள் மத்தியில் பேசி போர்க்கால அடிப்படையில் பணி துவக்கப்படும். தமிழ்நாடில் உள்ள அணைகளின் பாதுகாப்பு தன்மை குறித்து ஆய்வு மேற்கொண்டு மதகுகள் சீர் செய்யப்படும். இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்படும்” என அவர் தெரிவித்தார்.
ஆய்வின் போது அமைச்சர் செந்தில் பாலாஜி, கேரள மாநில சட்டமன்ற உறுப்பினர் பாபு, பொதுபணி துறை செயலாளர் சத்தீப் சக்சேனா, கோவை மாவட்ட ஆட்சியர் சமீரான், துணை ஆட்சியர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ், தலைமை பொறியாளர் முத்துசாமி மற்றும் பொதுப்பணி துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: சுமார் 3 ஆயிரம் கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்கள் மீட்பு ..அமைச்சர் சேகர்பாபு