கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே பொன்னாண்டம்பாளையம் கிராமம் அமைந்துள்ளது. இந்தக் கிராமத்தில் 1000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இந்தக் கிராமத்தின் கிழக்குப்பகுதி கணியூர் ஊராட்சியிலும், தெற்குப்பகுதி அரசூர் ஊராட்சியிலும், மேற்குப்பகுதி நாரணாபுரம் ஊராட்சியில், வடக்குப்பகுதி மோப்பிரிபாளையம் பேரூராட்சியில் இணைந்துள்ளது.
பொன்னாண்டம்பாளையம் கிராமம் 4 ஊராட்சி அமைப்புகளுக்கு உள்பட்டதாக பிரிக்கப்பட்டுள்ளதால் அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு இடையே சுணக்கம் ஏற்படுகிறது.
பள்ளி சான்றிதழ், இறப்பு சான்றிதழ் என பல்வேறு சான்றிதழ் வாங்குவதற்கு மக்கள் அவதிப்படும் சூழல் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், கிராமத்தின் வாக்குரிமை கணியூர் ஊராட்சியில் இருந்தாலும், ஆவணங்களில் 4 உள்ளாட்சி அமைப்பின் கீழ் இருப்பதாலும் குடிநீர், வசதி சாலை வசதி உள்பட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க முடியாத நிலையில் உள்ளாட்சி அமைப்புகள் இருப்பதாக கணியூர் ஊராட்சி மன்ற உறுப்பினர் செல்வராஜ் தெரிவித்தார்.
மேலும் இந்தக் கிராமம் 4 உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் வருவதால் பாஸ்போர்ட், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு போன்றவை பெறுவதற்கு பல்வேறு சிக்கல்கள் உள்ளதாகவும் இதன் காரணமாக தன்னுடைய வெளிநாட்டு கல்வியும் பாதிக்கப்பட்டதாக குமுறுகிறார் அப்பகுதி இளைஞர் மகேஷ்.
பெண்களைப் பொறுத்தவரை ஆரம்ப சுகாதார நிலையங்கள் செல்வதற்கும் சான்றிதழ்கள் பெறுவதற்கும் 4 உள்ளாட்சி அமைப்புகள் அலைகழித்து வருகின்றன. இந்தப் பிரச்சனை காரணமாக குடிநீர் இணைப்புகள் குடிநீர் வசதிகள் முறையாக கிடைக்கப்பெறவில்லை, குழந்தைகள் பள்ளியில் சேர்ப்பதற்கும் பிரச்சனை எழுகிறது. எனவே இதற்கு தீர்வு வேண்டி வரும் 6ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அதற்கு அடையாளமாக ஜனவரி 1-ஆம் தேதி வீடுகளில் கறுப்பு கொடி கட்டி எதிர்ப்பையும் தெரிவித்துள்ளதாக கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: அரசு நேரடி கொள்முதல்; கரும்பு விவசாயிகள் வரவேற்பு!