கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள நவமலையில் கடந்த மூன்று மாதங்கள் முன்பு இரண்டு பேரைத் தாக்கிய ஒற்றைக் காட்டு யானை, இரண்டு தினங்களுக்கு முன்பு மக்கள் வசிக்கும் பகுதிக்குள் நுழைந்தது. இதையடுத்து, வன அலுவலர் காசிலிங்கம் தலைமையில் 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, யானையை சர்க்கார்பதி வனப்பகுதிக்குள் விரட்டினர்.
இதனைத் தொடர்ந்து, அந்தக் காட்டு யானை ஆழியார் அணையை ஒட்டியுள்ள வனப்பகுதி வழியாக புளியகண்டி கிராமத்திற்குச் சென்றது. அங்கு சென்ற காட்டு யானை, மாரியம்மாள் என்பவரது வீட்டை இடித்து தரைமட்டம் செய்தது. அதனால், அச்சம் அடைந்த புளியகண்டி பொதுமக்கள் கிராமத்தை விட்டு வெளியேறினர்.
அதன்பின், பொதுமக்கள் அனைவரும் வால்பாறை சாலையில் உள்ள பாலத்தின் அடியில் கொட்டும் மழையில் நின்றபடி உள்ளனர். யானையின் நடமாட்டம் குறித்து பொதுமக்களுக்கு வனத்துறையினர் ஒலிப்பெருக்கி மூலம் தெரியப்படுத்தி வருகின்றனர்.
மேலும், வன அலுவலர் காசிலிங்கம் உத்தரவின் பேரில் வனக்காவலர் பிரபாகரன் தலைமையில் வேட்டைத் தடுப்பு காவலர்கள் காட்டு யானையை விரட்ட, கொட்டும் மழையில் வாகன ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: காட்டு யானைகள் முகாம் - வாகன ஓட்டிகள் அச்சம்