கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் 958 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இங்கு அரிய வகைத் தாவரங்களும், யானை, சிறுத்தை, புலி உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகளும் உள்ளன.
இந்த வனப்பகுதியில் இருந்து சந்தன மரங்கள் மற்றும் அரியவகை மூலிகை செடிகள் உள்ளிட்டவற்றை கடத்தல்காரர்கள் தொடர்ந்து கடத்தி வருவது வாடிக்கையாகி வருகிறது. இதை கண்காணிக்கும் நோக்கில் வனத்துறையினர் வனப்பகுதியில் பல இடங்களில் தானியங்கி கேமராக்களை பொருத்தியுள்ளனர். இந்நிலையில் நேற்று நவமலை பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, ஐந்து சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தி சென்றிருப்பதும், கண்காணிப்பிற்காக வைக்கப்பட்டிருந்த தானியங்கி கேமராக்களை சேதப்படுத்தியிருப்பதும் தெரியவந்தது.
சேதமாகியிருந்த தானியங்கி கேமராக்களை ஆய்வு செய்த போது, ஒரு கேமராவில் அடையாளம் தெரியாத கும்பல் சந்தன மரத்தை வெட்டிக் கடத்துவது தெரியவந்தது. கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை கொண்டு வனத்துறையினர் விசாரணை நடத்தியதில், தம்மம்பதி மலைவாழ் மக்கள் குடியிருப்பை சேர்ந்த சிலர் சந்தனமரங்களை வெட்டிக் கடத்தியது தெரியவந்தது.
அதன்பின்னர் அங்கு சென்ற வனத்துறையினர் அதேப்பகுதியைச் சேர்ந்த காளியப்பன் மற்றும் மணியன் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் இவர்களுடன், மேலும் மூன்றுபேர் இணைந்து மூன்று சந்தன மரங்களை வெட்டி கடத்திச் சென்று கேரளாவில் விற்பனை செய்தது தெரியவந்தது. கைதானவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் தலைமறைவாக உள்ள மூன்றுபேர் மற்றும் கடத்திய சந்தன மரம் உள்ளிட்டவற்றை கைப்பற்றும் வேலையில் இறங்கியுள்ளனர்.
இதையும் படிங்க:ரூ.50லட்சம் மதிப்புள்ள சந்தனமரக் கட்டைகளை கடத்த முயன்ற 14 பேர் கைது