கோயம்புத்தூர்: பொள்ளாச்சி ஆனைமலை பகுதியில் சாலையோர வியாபாரம் செய்துவரும் தம்பதியினரின் ஐந்து மாதக் குழந்தை அடையாளம் தெரியாத நபர்களால் கடந்த இரு நாள்களுக்கு முன்பு கடத்திச் செல்லப்பட்டது.
இது குறித்து ஆனைமலை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்த நிலையில் வால்பாறை காவல் துணைக் கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையில் எட்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
இதில், ராமர் (49), முருகேசன் (39) ஆகிய இருவர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பணத்திற்காக குழந்தையைக் கடத்தியது தெரியவந்தது.
அதே பகுதியைச் சேர்ந்த முத்துசாமி என்பவர் குழந்தை இல்லாத காரணத்தினால் குழந்தையைக் கடத்தவைத்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, காவல் துறையினர் முத்துசாமியையும் கைதுசெய்தனர்.
பின்னர், மூவரையும் நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் விரைந்துசெயல்பட்டு குழந்தையை மீட்ட காவல் துறையினருக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் டிஐஜி முத்துசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் ஆகியோர் சான்றிதழ் வழங்கி பாராட்டுத் தெரிவித்தனர். மேலும், குழந்தைக்குப் புதிய ஆடையை வாங்கி குழந்தையின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
குண்டர் சட்டத்தில் நடவடிக்கை
இது குறித்து செய்தியாளரிடம் பேசிய குழந்தையை மீட்ட காவலர்கள், “பணத்திற்காக குழந்தை கடத்தியது இதுவரை நடந்ததில்லை. முதல் முறையாகப் பணத்திற்காக ஐந்து மாதக் குழந்தை கடத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் முதலில் குழந்தையைப் பணத்திற்காகக் கேட்டுள்ளனர். ஆனால், குழந்தையைக் கொடுக்க மறுத்ததையடுத்து கடத்தியுள்ளனர். இதனையடுத்து குழந்தையைக் கண்டுபிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு 20 கிலோ மீட்டர் தூரமுள்ள கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வுசெய்து, குழந்தை மீட்கப்பட்டது.
குழந்தை கடத்தல் வழக்கில் தற்போது கைதுசெய்யப்பட்டவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்கான நடவடிக்கைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மேற்கொண்டுவருகிறார்” எனத் தெரிவித்தனர்.
மேலும், “திருநங்கைகளுக்கென சென்னையில் இருப்பது போன்று கோவையில் தனி விடுதி அமைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும். அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றனர்.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் குழந்தையை ரூ.3 லட்சத்துக்கு விற்ற தாய் - விசாரணையில் அம்பலம்