கோவை மாவட்டம், வால்பாறையில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. யானை, சிறுத்தை, கரடி போன்ற விலங்குகள் குடியிருப்புப்பகுதியில் சுற்றித் திரியும் நிலையில் பாம்புகளின் நடமாட்டமும் அதிகரித்து வருகிறது.
வால்பாறை அருகே மாணிக்கா எஸ்டேட் பகுதியில் குடியிருந்து வரும் சிவா என்பவர் வீட்டில் காலை சமையல் அறையில் பாம்பு உள்ளதாக வால்பாறை வனத்துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அந்தத் தகவலின் பேரில் வனத்துறையினர் கருப்பசாமி மற்றும் ஆனந்த் இருவரும் சென்று ஆய்வு செய்தனர்.
அங்கு சமையலறைப் பாத்திரங்கள் இடையில் பாம்பு சுருண்டு கிடந்தது கண்டு நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு, பாம்பை லாவகமாகப் பிடித்தனர். அது நாகப்பாம்பு என்பதும் சுமார் 4 அடி இருப்பதாகவும் தெரிவித்தனர்.
அதேபோல் வால்பாறை வாழைத்தோட்டப் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அருகில் குடியிருக்கும் பகுதியில் நல்ல பாம்பு ஒன்று, சுற்றித் திரிவதாக நீண்ட நாளாக மக்கள் தெரிவித்துள்ளனர். வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் பாறை இடுக்குகளிலிருந்து வெளியேறிய நாகப்பாம்பையும் வனத்துறையினர் லாவகமாகப் பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.