கோயம்புத்தூர் : ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வால்பாறை வனச் சரகத்திற்கு உள்பட்ட டாட்டா காப்பி எஸ்டேட் நிர்வாகத்தினர் வனத்துறை அலுவலர்களுக்கு அளித்த ரகசிய தகவலின் பேரில், அவர்கள் விசாரணை மேற்கொண்டனர்
விசாரணையில், செந்நாய்கள் கூட்டத்தால் கடித்துக் குதறப்பட்ட கடமான் ஒன்று காட்டில் குற்றுயிராக கிடந்துள்ளது. இந்தநிலையில், அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ்(40) சின்னச்சாமி (60) ஏழுமலை (38) ராம்குமார் (37) ஆகிய நான்கு பேரும், செந்நாய் கடித்து விட்டு சென்ற மான் இறைச்சியை வெட்டி எடுத்து சென்றுள்ளனர் என்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, பொள்ளாச்சி கோட்ட துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் உத்தரவின் பேரில், வால்பாறை வனச்சரகர் ஜெயசந்திரன் தலைமையில், முனியாண்டி சக்திவேல் ஆகியோர், மான்கறியை திருடிச் சென்ற 4 பேரையும் கையும் களவுமாக பிடித்தனர்.
அவர்களுக்கு, வனத்துறை அலுவலர்களின் உத்தரவுப்படி, தலா 25,000 வீதம் ஒரு லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது.
இனிமேல், இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கையின் பேரில் 4 பேரும் விடுவிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: கோவையில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்!