கோவை சிறுவாணி சாலை, காளம்பாளையம் கந்தவேல் நகர்ப் பகுதியில் வசிப்பவர் சுப்பிரமணி(72). வேளாண்மை பல்கலைக் கழகத்தில், வரை கலைஞராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். நேற்றிரவு, தனது வீட்டில் மனைவி தேவசேனா, இளையமகன் பணிதரன் ஆகியோருடன் உறங்கிக் கொண்டிருந்தார்.
அதிகாலை 4 மணியளவில், அவரது மனைவி தேவசேனா கட்டில் அடியில் ஒரு உருவம் இருப்பது போலத் தெரிந்து, படுக்கையிலிருந்து எழுந்து அலறியுள்ளார். அப்போது மறைந்திருந்த திருடன் தப்பி ஓடியுள்ளான். பின்னர் கணவன், மனைவி இருவரும் எழுந்து வீட்டின் பக்கத்து படுக்கை அறையைப் பார்த்த போது, அங்கிருந்த அலமாரியிலிருந்த 30 சவரன் நகையும், 15 ஆயிரம் பணம் ஆகியவை திருடப்பட்டிருந்தன.
சுப்பிரமணியின் மனைவி தேவசேனா கழுத்தில் அணிந்து இருந்த 8 பவுன் தங்கச் சங்கிலியைத் திருட முயற்சி செய்யும் போது, விழித்துக் கொண்டதால் கழுத்தில் அணிந்திருந்த நகை தப்பியுள்ளது. இது தொடர்பாகப் பேரூர் காவல் நிலையத்திற்கு தகவலளித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினரும், தடயவியல் நிபுணர்களும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். பேரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடிக்கடி திருட்டு சம்பவம் நடைபெற்று வருவதாலும், இது தீபாவளி பண்டிகை காலம் என்பதாலும் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.