சென்னை: தமிழ்நாட்டின் 2022-23ஆம் ஆண்டுக்கான நிதிநிலையறிக்கை (Tamil Nadu budget of 2022-23) தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், சென்னை தலைமைச்செயலகத்தில் மார்ச் 18ஆம் தேதியான இன்று தாக்கல் செய்தார்.
வரவேற்கத்தக்கது
இந்த பட்ஜெட் குறித்து கொடிசியா (கோவை மாவட்ட சிறுதொழிலதிபர் சங்கம் - Coimbatore District Small Scale Industry Association) தலைவர் ரமேஷ்பாபு கூறுகையில், 'தமிழ்நாட்டின் வருவாய்ப் பற்றாக்குறையை 4.15 % இருந்து 3.08 %, ரூ.7,000 கோடியாகக் குறைத்துள்ளது. தொழில் துறைக்கு தேவைப்படும் திறன்மிகு தொழிலாளர்களை உருவாக்க தனியார் துறையுடன் சேர்ந்து சிறப்புத் திட்டங்களை அறிவித்துள்ளது. முதலீட்டு மானியத்திற்காக 300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.
அத்துடன் மேலும், சிறு, குறு, நடுத்தரத்தொழில் துறைக்கு ரூ.911.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கோவை, பெரம்பலூர், வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் புதிய தொழில்பூங்காக்களை உருவாக்கி அதன்மூலம் ரூ. 50,000 கோடி முதலீட்டை வரவழைக்கும் முயற்சி ஆகியவற்றை வரவேற்கிறோம்.
ஏமாற்றமளிப்பது
முதலீட்டு மானியத்திற்காக 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. அதேசமயம், மூலப்பொருட்களின் விலை ஏற்றத்திற்கு இது தீர்வாக இருக்காது. சிறு, குறு தொழில்களுக்கான வட்டி மானியம் அறிவிக்காதது, எம்ஓடி பத்திரப்பதிவு கட்டணம் உள்ளிட்டப் பல்வேறு முக்கிய பிரச்னைகள் குறித்து அறிவிப்பு இல்லாதது ஏமாற்றத்தை அளிக்கிறது' என்று தெரிவித்துள்ளார்.
ரூ.300 கோடி ஒதுக்கீடு
தமிழ்நாடு பட்ஜெட் குறித்து தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கத்தலைவர் ஜேம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், '2022-23ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் அரசுப் பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு மேற்படிப்பு செல்ல உதவிடும் வகையில் மாதம் ரூ.1,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படுவது, தொழிற்துறை சார்ந்த கைத்தொழில் மேம்பாட்டுக் குழுமத்தை பல்வேறு மாவட்டங்களில் கொண்டு வருவதற்கு நிதி ஒதுக்கீடு செய்தது, தொழில்துறையினர் வாங்கும் இயந்திரங்களுக்கும் புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கும் வழங்கி வரும் மானியத்தை ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்தது ஆகியனவற்றை வரவேற்கிறோம்.
தொழிற்பேட்டைக்கு நிதி எங்கே?
அதேசமயம், தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும் குறுந்தொழில்களை பாதுகாக்க 'தனிக் கடன் திட்டம்' அறிவிக்கக் கோரியது பட்ஜெட்டில் இல்லை. கோவையில் ஜாப் ஆர்டர்கள் பெற்று உதிரிபாகங்கள் செய்துவரும் குறுந்தொழில் முனைவோருக்கு தனி குறுந்தொழில் பேட்டை அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு பட்ஜெட்டில் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையம் படிங்க: தனியார் பள்ளிகளுக்கும் இலவசப் புத்தகம் - அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்