கோயம்புத்தூரில் நவம்பர் 2ஆம் தேதியன்று ஐம்பொன் சிலையின் ஒரு பாகத்தை விற்க முயன்ற ஹரி, பால வெங்கடேஷ் என்ற இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதை அடுத்து, தீனதயாளன், அருண், திருநாவுக்கரசு ஆகிய மூவர் கடந்த 3ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.
அந்த மூவரிடம் இருந்து 33 கிலோ எடைகொண்ட ஆண் ஐம்பொன் சிலை, 20 கிலோ எடைகொண்ட பெண் ஐம்பொன் சிலை பறிமுதல் செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து, ஐந்து பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், அவை சரவணம்பட்டி பகுதியில் இருந்து இரண்டு வருடங்களுக்கு முன் திருடப்பட்டது தெரியவந்தது.
இது குறித்து, கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் சரவணம்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்ததும் கண்டறியப்பட்டது. மேலும், கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய தொடர் விசாரணையில், சிலை கடத்தலில் முக்கிய குற்றவாளி தினேஷ் என்பது தெரியவந்தது. இதையடுத்து, தினேஷை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட ஐந்து நபர்களில் ஒருவரான பால வெங்கடேஷுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவருக்கு மட்டும் பிணை வழங்கப்பட்டு, சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.