சென்னை: மாரிதாஸ் பதில்கள் என்ற பெயரில் யூ-ட்யூப் சேனல் நடத்திவந்த மாரிதாஸ் என்பவர் 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் காணொலி ஒன்றை வெளியிட்டார். அந்தக் காணொலியில் தனியார் தொலைக்காட்சி பற்றி மாரிதாஸ் கடுமையான விமர்சனங்களை வைத்திருந்தார்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தைச் சேர்ந்த நிர்வாகி வினய் சரவோகி மத்திய குற்றப்பிரிவு காவல் துறையிடம் புகார் அளித்தார். மாரிதாஸ் போலியான மின்னஞ்சலைக் காண்பித்து அதன்மூலம் நிறுவனம் குறித்தும் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் குறித்தும் அவதூறு பரப்பும் வகையில் பேசியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணையானது நடைபெற்றுவந்த நிலையில் இவ்வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர், மாரிதாஸை கைதுசெய்தனர். இந்த வழக்கு தொடர்பாக மாரிதாஸை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் இன்று (டிசம்பர் 13) எழும்பூர் நீதிமன்றத்தில் முன்னிறுத்தினர்.
அதனைத் தொடர்ந்து யூ-ட்யூபர் மாரிதாஸுக்கு வரும் 27ஆம் தேதிவரை நீதிமன்ற காவல் வழங்கி எழும்பூர் தலைமை குற்றவியல் நடுவர் கோதண்டராஜு உத்தரவிட்டார். பின்னர், மாரிதாஸை வாகனத்தில் ஏற்றிய காவல் துறையினர், அவரைப் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லும்போது இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த சிலர் மாரிதாஸ் சென்ற காவல் வாகனம் மீது மலர்த்தூவி மரியாதை செலுத்தி 'பாரத் மாதா கி ஜெய்' எனக் கோஷமிட்டனர்.
இதனால், நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே கடந்த 9ஆம் தேதி மாரிதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக மதுரையில் கைதுசெய்யப்பட்டு தேனி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பாட்டியைக் கல்லால் அடித்து கொலை செய்த பேரன்கள் - காவல்துறை விசாரணை