சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம், கணியாமூரில் உள்ள தனியார் பள்ளியின் விடுதியில் தங்கிப்பயின்ற 12ஆம் வகுப்பு மாணவியின் மரணம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது.
மாணவி தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துவரும் நிலையில், மாணவியின் பெற்றோர் அதை முற்றிலும் மறுத்து வருகின்றனர்.
இந்த வழக்கு தொடர்பாக சில யூ-ட்யூப் சேனல்கள் களத்திற்குச் சென்று தங்களின் தனிக்கருத்துகளைப் பதிவிட்டும், பல அப்பாவி இளைஞர்களை காவல் துறை கைது செய்துள்ளதாகவும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.சதீஷ்குமார் கடந்த ஆக.29ஆம் தேதி பிறப்பித்துள்ள உத்தரவில், மாணவி மரணம் தொடர்பாக “இணை விசாரணை" (Co-investigation) நடத்தும் சமூக வலைதளங்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், யூட்யூப் சேனல்களை முடக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இதற்கு யூ-ட்யூப் சேனல்கள் தரப்பில் அறிக்கையாக, 'நீதிமன்றம் பயன்படுத்தியுள்ள "இணை விசாரணை" என்ற வார்த்தையே ஆபத்தானது என நாங்கள் கருதுகிறோம். அரசும், அதிகாரவர்க்கமும் மறைக்க நினைக்கும் உண்மைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே பத்திரிகையாளர்களின் கடமை.
அந்தப் பணியையே இந்த வழக்கிலும் அனைத்து ஊடகங்களும் செய்து வருகின்றன. அவ்வாறு இருக்கையில், பத்திரிகையாளர்கள் தங்கள் கடமையை செய்வதைத் தடுக்கும் வகையிலும் அவர்களை அச்சுறுத்தும் வகையிலும் இந்த உத்தரவு அமைந்துள்ளது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்த நமது தலைவர்கள், கருத்துச் சுதந்திரத்தை ஒவ்வொரு குடிமகனுக்கும் அடிப்படை உரிமையாக்கியுள்ளனர். இந்த உரிமையின் அடிப்படையில் செயல்படும் பத்திரிகையாளர்களைப் பேசக்கூடாது என்பதும், பேசினால் நடவடிக்கை பாயும் என்று உத்தரவிடுவதும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது.
ஆகவே, கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக டிஜிட்டல் ஊடகங்கள் இணை விசாரணை நடத்தக் கூடாது என்றும், அதுகுறித்து செய்தி வெளியிடும் யூ-ட்யூப் சேனல்களை முடக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை தவறான முன்னுதாரணமாகவே கருதுகிறோம்.
இந்த உத்தரவை திரும்பப்பெற்று கருத்துச் சுதந்திரத்தை நிலைநாட்டுவதற்கு தேவையான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நீதித்துறையில் ஊழல் உள்ளது எனும் கருத்தில் உறுதியாக இருக்கிறேன் - நேரில் ஆஜரான சவுக்குசங்கர் பதில்