சென்னை: கொருக்குப்பேட்டை பாரதி நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் என்கிற அமுக்கா ரமேஷ் (20). இவர் மீது திருட்டு மற்றும் அடிதடி வழக்குகள் உள்ளன. மேலும் இவர் பாரிமுனை மண்ணடி பகுதியில் லோடுமேனாக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் (ஏப்ரல் 10) இரவு நேரத்தில் பாரதி நகர் குடியிருப்பு பகுதியில் தன்னுடைய நண்பரின் பிறந்த நாள் நிகழ்ச்சிக்காக ரமேஷ் சென்றிருந்தார். பிறந்த நாள் நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில், அங்கிருந்த சிலர் ரமேஷை சரமாரியாக தாக்கி, அவருடைய தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.
இதில் சம்பவ இடத்திலேயே ரமேஷ் உயிரிழந்தார். மேலும் இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அங்கிருந்து அலறியடித்து சிதறி ஓடினர். உடனடியாக சம்பவம் தொடர்பாக ஆர்கே நகர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் ரமேஷின் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ரமேஷை சரமாரியாக தாக்கி கொலை செய்தது அதே குடியிருப்பு பகுதியை சேர்ந்த உதயா என்கிற கருப்பு உதயகுமார் (30), அரவிந்தன் (21) மற்றும் பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த முஹம்மது ரசூலுல்லாஹ் (22) ஆகியோர் என்பது தெரியவந்தது.
உடனடியாக கொருக்குப்பேட்டை சிவாஜி நகர் மற்றும் ரெங்கநாதபுரம் ரயில்வே தண்டவாள பகுதியில் பதுங்கியிருந்த 3 பேரையும் காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். பிடிபட்ட நபர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட ரமேஷ், உதயாவின் தம்பியான ராஜேஷின் ரூ.27 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை கடந்த 4 நாள்களுக்கு முன்பு திருடி விட்டதாகவும், இந்நிலையில் குடியிருப்பு பகுதியில் நடந்த ஆனந்த் என்பவரின் பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு ரமேஷ் வந்தபோது, அங்கிருந்த உதயா மற்றும் அவருடைய நண்பர்கள் ரமேஷிடம் செல்போனை கொடுக்குமாறு கேட்டுள்ளனர். அப்போது இருதரப்பினருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
அனைவரும் போதையில் இருந்ததால் ஆத்திரமடைந்த உதயா, அவரது நண்பர்கள் ரமேஷை அங்கிருந்த கட்டைகளை எடுத்து சரமாரியாக தாக்கி தரதரவென்று பி பிளாக் பகுதி வரை சாலையில் இழுத்துச் சென்று அருகில் இருந்த கல்லை எடுத்து தலையில் போட்டு கொலை செய்துள்ளனர் என்பது தெரியவந்தது. மேலும் பிடிபட்டவர்கள் மீது கொலை, திருட்டு வழக்குகள் இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இதையும் படிங்க: தனியார் நிறுவன ஊழியரை தாக்கி 82 லட்சம் கொள்ளை