சென்னை: மலேசியா, தாய்லாந்து, இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து கடத்தல் கும்பல் சென்னைக்கு விமானங்களில் பெருமளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் தனிப்படை அமைத்து சென்னை விமான நிலையத்துக்கு நேற்று (ஜூன்28) வரும் அனைத்து வெளிநாட்டு விமான பயணிகளையும் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் சென்னை விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த, ராமநாதபுரத்தைச் சோ்ந்த முகமது முகமது ஹனிபா(32), என்ற பயணியையும், அதைப் போல், தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் இருந்து வந்த ஏர் ஏசியா விமானத்தில் வந்த சென்னையைச் சோ்ந்த முகமது ஆசிக்(38) என்பவரையும் நிறுத்தி சோதனை செய்தனா்.
அதோடு மட்டுமின்றி இலங்கையில் இருந்து சென்னை வந்த விமானத்தில் வந்த ஸ்பைஜெட் விமான பயணிகள் 11பேரையும் நிறுத்தி சோதனை செய்தனா். மொத்தம் 13 பயணிகளிடம் சுங்கத்துறையினா் நடத்திய சோதனையில் அவர்களுடைய உள்ளாடைகள் மற்றும் ஆசனவாய் மற்றும் பேண்ட் பாக்கெட் போன்றவைகளில் தங்கப்பசை, தங்க செயின் பெருமளவு மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த 13 பயணிகளிடமிருந்து மொத்தம் இருந்து 2 கிலோ 265 கிராம் தங்கத்தை கைப்பற்றினர். அதன் சர்வதேச மதிப்பு ரூபாய் ஒரு கோடி நான்கு லட்சம் ஆகும். இதனயைடுத்து சுங்கத்துறையினா் கடத்தலில் ஈடுபட்ட 13 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: தலை முடியில் வைத்து தங்கம் கடத்தல் - சுங்கத்துறை அலுவலர்கள் பறிமுதல்