சென்னையிலிருந்து நாகர்கோவில் செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் திங்கட்கிழமை காலை நாகர்கோவிலில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்துள்ளது. இதையடுத்து ரயில் பராமரிப்புப் பணிக்காக சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து நேற்று(மே.04) முன்தினம் இரவு தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று(மே.05) மாலை ஊழியர்கள் ரயில் பெட்டிகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது ஒரு பெட்டியிலிருந்து துர்நாற்றம் வந்துள்ளது. இதையடுத்து ஊழியர்கள் ரயில் பெட்டியின் உள்ளே திறந்து பார்த்தபோது அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத 40 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் இருந்துள்ளது.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் இதுகுறித்து தாம்பரம் ரயில்வே காவல் துறையினருக்கும், அலுவலர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சென்ற ரயில்வே காவல் துறையினர் அழுகிய நிலையிலிருந்த பெண்ணின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தாம்பரம் ரயில்வே காவல் துறையினர் அழுகிய நிலையில் உயிரிழந்த பெண் யார், எப்படி உயிரிழந்தார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாம்பரம் ரயில் நிலையத்திற்கு பராமரிப்பு பணிக்காக வந்திருந்த சென்னை - நாகர்கோவில் வாராந்திர சிறப்பு ரயிலில் அழுகிய நிலையில் பெண் சடலம் இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஷவர்மா விற்பனைக் கூடங்களுக்கு ரூ.20,000 அபராதம்; உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி