சென்னை, கொளத்தூர் திருமுகன் நகர் பகுதியைச் சேர்ந்த மோனிகா ஸ்ரீ (23). இவர் கடந்த 6ஆம் தேதி வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அந்தப் புகாரில், ”சென்னை, கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த டாக்டர் வினோத்குமார் (22) என்பவருடன் எனது திருமணம் பெரியோர்களால் நிச்சியிக்கப்பட்டது. அப்போது என் அப்பா, ஒரே மகள் என்பதால் 100 சவரன் நகை, கார் ஆகியவற்றை சீர்வரிசையாகத் தருவதாக ஒப்புக் கொண்டார்.
அதன் பின்பு வினோத்குமாரின் தந்தை, அம்மா, பெரியப்பா, மாமா ஆகியோர் திடீரென என் அப்பாவுக்கு போன் செய்து ”200 சவரன் நகையை வரதட்ணையாகக் கொடுக்க வேண்டும், இல்லை என்றால் திருமணம் நடக்காது” என்று மிரட்டினர்.
பின்னர் 120 சவரன் தருகிறேன் என்றும், மீதமுள்ள 80 சவரன் நகையை கொஞ்ச கொஞ்சமாகக் கொடுக்கிறேன் என்றும் எனது வீட்டார் சொன்னதை அடுத்து, 2019ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி எனக்கு வினோத்குமாருடன் திருமணம் நடந்தது.
தற்போது எங்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். ஆனால் திருமணத்துக்கு பின்னர் என் கணவர் உள்பட அவரது குடும்பத்தார் அனைவரும் வரதட்சணை கேட்டு தொடர்ந்து சித்தரவதை செய்து வருகின்றனர்.
எனவே என் கணவர், அவரது குடும்பத்தார் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” எனக் கூறி இருந்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் துறையினர் கொலை மிரட்டல், ஆபாசமாகப் பேசுவது, வரதட்னை கேட்டு கொடுமைப்படுத்துவது, கத்தி உள்ளிட்ட ஆய்தங்களால் துன்புறுத்துவது ஆகியபிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல்!