சென்னை - பள்ளிக்கரணை மனோகர் நகரில் வசித்து வருபவர் பாலச்சந்தர் (39). இவர் வடபழனி, மும்பை மற்றும் துபாயில் குளோபல் டச் என்ற தனியார் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவருக்குத் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், மனைவி காலமானதால் குழந்தைகளைத் தனது தாய், தந்தையரிடம் ஒப்படைத்து விட்டு, தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் இவரது நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்த செந்தாமரை (எ) மயூரவர்ஷினி (46) என்பவர், தனது சொந்த ஊர் பெங்களூரு எனவும், திருமணம் ஆகவில்லை எனவும் கூறி அறிமுகமாகியுள்ளார்.

நாளடைவில் இவர்களது பழக்கம் திருமணம் வரைச்செல்ல, பாலச்சந்தரிடம் செலவுக்காக எனக்கூறி லட்சக் கணக்கில் பணத்தை செந்தாமரை வாங்கியுள்ளார். இதனிடையே, செந்தாமரையின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்படவே, அவர் குறித்து விசாரித்தபோது, அவருக்கு ஏற்கெனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்ததும், ஈரோடு மாவட்டம் காலிங்கராயபுரம் ஊராட்சித் தலைவராக கடந்த 2006-2016ஆம் ஆண்டு வரை, செந்தாமரை இருந்ததும் தெரிய வந்தது.

அவரிடம் இதுகுறித்து கேட்டபோது மழுப்பலாகவே பதிலளித்துள்ளார். அதனைத்தொடர்ந்து பணிக்கு வருவதையும் செந்தாமரை நிறுத்தி விடவே, தன்னிடம் பெற்ற பணத்தை பாலச்சந்தர் திருப்பிக் கேட்டுள்ளார். இதனையடுத்து, செந்தாமரை பாலசந்தருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகத் தெரிகிறது. இந்நிலையில் பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் பாலச்சந்தர் புகாரளித்தும் அவர்கள் ஏற்க மறுத்ததால், காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்தார்.

இது தொடர்பாக செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பாலச்சந்தர், ' செந்தாமரை என்பவர் திருமண ஆசை வார்த்தைக் கூறி தன்னிடமும், தனது பெயரில் வாடிக்கையாளர்களிடமும் 7 லட்சம் வரை பணம் பெற்றுள்ளார். ஏற்கெனவே திருமணம் ஆனதை மறைத்ததால் தன்னிடம் பெற்ற பணத்தை திரும்ப கேட்டபோது, தனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார். அதுமட்டுமல்லாமல் அவரது செல்வாக்கைப் பயன்படுத்தி அவர் மீது கொடுத்தப் புகாருக்கு காவல்துறை தரப்பில் நடவடிக்கை இல்லாததால் இதுதொடர்பாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளேன் ' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: விளையாட்டை பெண்கள் தேர்வு செய்யவேண்டும்: தங்க மங்கை கலைவாணி பேட்டி!