கரோனா வைரஸ் பாதிப்பால் மாநில அரசின் நிதி நிலைமை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில், பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த நிறுவனங்களும், தொழிற்சாலைகளும் மீண்டும் பணியை தொடங்க வேண்டும். அதேபோல் ஊரடங்கால் மக்களின் வருவாயும், நுகர்வும் குறைந்துள்ளது. ஊரடங்கில் கடும் இழப்பை சந்தித்துள்ளதால் தொழில்களுக்கு அரசு ஊக்க அறிவிப்புகளை வெளியிட்டு, வரி சலுகைகள், குறைந்த வட்டியில் கடன், வட்டி தள்ளுபடி, மின்சாரக் கட்டணம் ரத்து போன்றவைகளை அறிவிக்க வேண்டுமென கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன.
பல்வேறு மாநிலங்கள் பொதுமக்களுக்கும், ஊரடங்கால் அதிகம் பாதிக்கப்பட்ட அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் சலுகைகளை வழங்கியுள்ளன. தொழிற்சாலைகளுக்கு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கரோனா வைரஸ் பாதிப்பு நாட்டில் அதிகரிப்பதற்கு முன்பாகவே, கேரளா 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஊக்கத் திட்டத்தை அறிவித்தது. ஒரு மாநில அரசால் இவ்வளவு பெரிய திட்டத்தை செயல்படுத்த முடியுமா என்று கூட பேசப்பட்டது. கர்நாடக மலர் விவசாயிகள், முடி திருத்துபவர்கள், நெசவாளர்கள், கட்டடத் தொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்கள், ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்கள், தொழில் நிறுவனங்களுக்கு ஆயிரத்து 610 கோடி ரூபாய் மதிப்பில் உதவி திட்டத்தை அறிவித்துள்ளது. அது வெறும் அறிவிப்பாக இல்லாமல் ஒவ்வொரு துறையிலும் எவ்வளவு வழங்கப்படும், எத்தனை பேருக்கு வழங்கப்படும் என்ற தகவலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் ஒரு சிலருக்கு உதவித் தொகை அறிவிக்கப்பட்டாலும், பெரும்பாலானவர்களுக்கு அது கிடைக்கவில்லை எனப் புகார் கூறப்படுகிறது.
ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டதிலிருந்து தமிழ்நாடு நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. நிதி ஆதாரத்திற்கு பெருமளவு மத்திய அரசையே நம்ப வேண்டியுள்ளது. தற்போது மதுபானம் மற்றும் பெட்ரோல் டீசல் மட்டுமே ஜிஎஸ்டி வரம்புக்கு வெளியே உள்ள நிலையில், தமிழ்நாடு அரசு டாஸ்மாக் மதுபானங்களின் விலையை ஏற்றுவது, பெட்ரோல், ஜிஎஸ்டி மீதான கலால் வரியை உயர்த்துவது போன்றவற்றிலேயே கவனம் செலுத்தி வருகிறது.
இதுபோன்ற சூழலில், மாநில அரசு என்ன செய்ய வேண்டும் எனக் கருத்து தெரிவித்த சென்னை பல்கலைக்கழக பொருளாதார பிரிவுத் தலைவர் ஜோதி சிவஞானம் ஈடிவி பாரத் செய்திகளிடம் பேசுகையில், "ஊக்க அறிவிப்பு வெளியிடுவதில் மாநில அரசு பெரிய அளவில் உதவ முடியாது, மத்திய அரசுதான் செய்ய முடியும். தற்போது அதிகம் பாதிப்பை சந்தித்துள்ள சிறு, குறு நிறுவனங்களுக்கு வொர்கிங் கேபிட்டல் பிரச்னை உள்ளது. ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும், அன்றாட செலவு செய்ய வேண்டும், மின்சாரக் கட்டணம் செலுத்த வேண்டும், ஏற்கனவே ஒப்புக்கொண்ட வேலைகளை செய்து முடிக்க வேண்டும், ஆனால் வருமானம் வராது, புதிய ஆர்டர்களை எடுக்க முடியாது. எனவே, சிறு நிறுவனங்களுக்கு மத்திய அரசு கடனுதவி வழங்க வேண்டும்.
மாநில அரசு முடிந்த அளவுக்கு பொருளாதார உதவி செய்து வருகிறது. தமிழ்நாட்டில் பாதிப்பு அதிகம் உள்ளதால், நோயாளிகளை பரிசோதனை செய்து, அவர்களுடன் தொடர்புடையவர்களை கண்டறிந்து சிகிக்சை அளிப்பது, புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு அளிப்பதிலேயே கவனம் செலுத்தி வருகிறது. அதற்கே நிதியையும் பயன்படுத்தி வருகிறது. மூன்றில் 1 பங்கு வரியைத்தான் மாநில அரசு வரி வசூல் செய்கிறது. ஆனால், மூன்றில் இரண்டு பங்கு செலவை மாநில அரசுகள் செய்து வருகின்றன. மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு போதிய நிதி கொடுக்கவில்லை. மாநிலங்கள் நிதி திரட்ட வழியில்லை, அதனால் மத்திய அரசு சொத்து வரி உள்ளிட்டவற்றின் மூலம் வரி வசூலை அதிகரித்து ஊக்க அறிவிப்புகளை வெளியிட வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: 'ஊரடங்கு தொடர்ந்தால் பொருளாதார நிலை இன்னும் மோசமாகும்'