சென்னையில் சர்வதேச இளைஞர் திருவிழா (CIYF) நிகழ்ச்சி கடந்த 1ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இன்றைய நிகழ்ச்சி அனைவருக்கும் நல்வாழ்வு என்ற தலைப்பில் சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நடைபெற்றது. இதில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இளைஞர்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெறும் இந்த கருத்தரங்க நிகழ்ச்சியின் கடைசி நாளான நாளை மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேல், மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் செளபேவும் கலந்துகொள்கின்றனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சர்வதேச இளைஞர் திருவிழா நிகழ்ச்சி, தமிழ்நாடு அரசோடு சேர்ந்து உடல் உறுப்பு மாற்று விழிப்புணர்வை ஏற்படுத்திவருகின்றனர். இந்தாண்டு அனைவருக்கும் நலவாழ்வு என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பல்வேறு நாடுகளிலிருந்து இளைஞர்கள் இந்த கருத்தரங்கங்கத்தில் கலந்து கொண்டுள்ளனர். வருங்காலங்களில் அரசு எடுத்திருக்கக் கூடிய மழைநீர் சேகரிப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு, தொற்று நோய் போன்றவைகள் குறித்து இந்நிகழ்ச்சியில் விழிப்புணர்வு அளிக்கப்பட்டது என்றார்.
இதனையடுத்து சுபஸ்ரீயை மீட்க ஆம்புலன்ஸ் தாமதமாக வந்தது குறித்து அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த விஜயபாஸ்கர், ”சென்னையில் விபத்து நடைபெற்றால் காயமடைந்தவரை 8.36 நிமிடத்தில் மீட்பது ஆம்புலன்ஸ் சேவையின் வழக்கம். ஆனால் சுபஸ்ரீ விபத்தில் சிக்கியபோது அவ்வாறு நடக்கவில்லை என்று செய்திகளில் படித்தேன். அதுகுறித்து விசாரிக்கப்படும்” என்றார்.