சென்னை: தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தேமுதிக, அமமுகவுடன் கூட்டணி வைத்து 60 தொகுதிகளில் தேர்தலை சந்திக்கிறது. கட்சியின் சார்பில் நட்சத்திர பேச்சாளர்கள் பெரிய அளவில் இல்லாததால் வாக்காளர்களை கவருவதில் பெரும் பிரச்னையை சந்தித்து வருகிறது. இதனால் கட்சியின் வெற்றி வாய்ப்பு, குறித்து அக்கட்சியினரிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தேர்தல் பரப்புரை, பொதுக்கூடடங்களை தவிர்த்து இறுதிக்கட்ட பரப்புரையில் மட்டும் ஈடுபடுவார் என தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. விஜயகாந்த் சில தொகுதிகளில் பரப்புரை மேற்கொண்டாலும், அவர் எதுவும் பேசாமல் கையசைத்து மட்டுமே செல்வதால் தொண்டர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தான் நிற்கும் தொகுதியான விருத்தாச்சலத்தில் மட்டும் பரப்புரை மேற்கொள்கிறார். இவர் வேறு தொகுதிகள் எதிலும் பரப்புரை மேற்கொள்ளாதது கட்சிக்கு பெரும் சரிவே என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
கட்சியின் துணை செயலாளர் எல்.கே சுதீஷ் பெருமளவில் பரப்புரையில் ஈடுபட்டு வாக்காளர்களை கவருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் கரோனா தொற்றால் சென்னையில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தேர்தல் பரப்புரை இன்னும் சில நாள்களில் முடிவடைய உல்ள நிலையில் அவர் மீண்டும் குணமாகி பரப்புரையில் ஈடுபடுவது சந்தேகம் தான். மேலும் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தீவிர பரப்புரையில் ஈடுபட்டாலும், அவர் தேர்தல் களத்துக்கு புதிது. எனவே அவரது தேர்தல் சம்மந்தமான பேச்சு வாக்காளர்களை ஈர்க்காது என்கின்றனர்.
இது குறித்து ஈ டிவி பாரத் செய்தி தளத்துடன் தொலைபேசி வாயிலாக பேசிய அரசியல் விமர்சகர், அ. மார்க்ஸ், "விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தனது தேர்தல் பரப்புரையில் தேமுதிக என்ன தவறு செய்தது. ஏன் மக்கள் தனது கட்சிக்கு ஒட்டு போட கூடாது என்று பேசியுள்ளார். இது கட்சியின் பலவீனத்தை காட்டுகிறது. கடந்த கால தேர்தல்களில் விஜயகாந்தின் பேச்சு வாக்காளர்களை கவர்ந்து அதிக ஓட்டு விழுக்காட்டை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது" என்ற அவர் தேர்தலில் தேமுதிகவின் வெற்றி வாய்ப்பு, குறைவுதான் என்றார்.