அஞ்சல் துறையில் தபால்காரர்கள், உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு கடந்த 14ஆம் தேதி நடத்தப்பட்டது. அதில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே கேள்விகள் இருந்தன. தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகள் புறக்கணிக்கப்பட்டன. இதை எதிர்த்து திமுக மாணவரணி செயலாளர் எழிலரசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அமர்வின் முன் இன்று விசாரணைக்கு வந்தபோது, தபால் துறை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாக மத்திய அரசு சார்பில் இரண்டு அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.
மேலும், மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரல் ஆஜராகி, அனைத்து தபால் துறை தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், தேர்வை எப்படி நடத்துவது என்பது குறித்து அமைச்சகம் ஆலோசித்து வருவதாகவும், தெரிவித்தார்.
இதையடுத்து, ’தபால் துறை தேர்வு அறிவிப்பாணைகளை ரத்து செய்ததற்கான நிர்வாக காரணங்கள் என்ன? என்பது குறித்து, ஆவணங்களுடன் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 5ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.