தமிழ்நாடு பாண்டிச்சேரி அறங்காவலர் குழு நிர்வாகத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சேகர் ரெட்டிக்கு, தி நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்தில், திருமலை திருப்பதி தேவஸ்தானத் தலைவர் சுப்பா ரெட்டி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சுப்பா ரெட்டி, ”புரட்டாசி மாதத்தில் சென்னையிலிருந்து திருப்பதிக்கு அதிக அளவில் பக்தர்கள் நடைபாதை வழியாக வந்து செல்கின்றனர். 146 கிலோமீட்டர் நடைபாதை உள்ளதால் மூன்று இடங்களில் தற்காலிக தங்கும் விடுதிகள் அமைக்கப்பட உள்ளன.
இங்கு அவர்களுக்கு தங்கும் வசதி செய்து தரப்படும். அவர்களாக சமைத்து சாப்பிட்டுக் கொள்ளலாம். தி நகரில் கட்டப்பட்டு வரும் பத்மாவதி கோயில் பணிகள் ஓராண்டில் முடிவுற்று கும்பாபிஷேகம் நடைபெறும்.
கரோனா வைரஸ் தொற்று காரணமாக தற்போது 15 ஆயிரம் வரையிலான மக்கள் முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்கின்றனர். தொற்று காரணமாக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
திருப்பதி பிரம்மோற்சவத்துக்குப் பின்னர் கரோனா மற்றும் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி பக்தர்களை அனுமதிப்பது குறித்து முடிவெடுக்கப்படும். மூன்றாவது அலை வரவில்லை எனில் பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: T23 புலியை சுட்டுக்கொல்ல எதிர்ப்பு தெரிவித்த வழக்கு நாளை விசாரணை