சென்னை பூந்தமல்லியில் உள்ள தனியார் மண்டபத்தில் அனைத்து கல்யாண மண்டபம் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் கோவிட்-19 பேரிடர் கால சிறப்பு சேவைக்கான பாராட்டு விழா நடைபெற்றது. சங்கத்தின் மாநில தலைவர் ஜான் அமல்ராஜ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில், திருமண மண்டபத்தின் அளவிற்கேற்ப, 50 விழுக்காடு மக்கள் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்; திருமண மண்டபத்திற்கான சொத்து வரி செலுத்த, 6 மாத காலம் அவகாசம் வழங்க வேண்டும்; மாசு கட்டுப்பாட்டு வாரிய விதிகளில் இருந்து விலக்களிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை சங்கத்தினர் முன்வைத்தனர். தொடர்ந்து தங்கள் கோரிக்கைகள் அடங்கிய தீர்மானத்தை, நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அமைச்சர் பெஞ்சமினிடம் வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநில தலைவர் ஜான் அமல்ராஜ், "ஆறு மாத காலமாக மண்டபங்கள் திறக்கப்படாமல் இருந்ததால் அரசுக்கு ஜி.எஸ்.டி மூலம் வரவேண்டிய 18 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் 3000க்கும் அதிகமான திருமண மண்டபங்கள் மூடப்பட்டதால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட திருமணங்கள் நிறுத்தப்பட்டன. இதனால் நேரடியாகவும் மறைமுகமாகமாகவும் 20 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: நடமாடும் திருமண மண்டபம் - அசத்தும் அலங்கார மேடை அமைப்பாளர்!