சென்னை: ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற அமமுக பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை டிடிவி தினகரன் நேற்று (மார்ச் 12) வெளியிட்டார். அப்போது, அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.
அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் மேடையில் பேசுகையில், “அமமுக கூட்டணி இயற்கையான கூட்டணி, இயற்கையை யாரும் அழிக்க முடியாது. மக்கள் நினைத்தால் அமமுக தான் முதல் அணி. தீயசக்தி திமுக ஆட்சியில் அமரக்கூடாது என்பதை தடுக்கவே நாம் போராடி வருகிறோம். தமிழ்நாடு சுமார் 7 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கடனில் உள்ளது. கடனில் தள்ளாடுகிறது தமிழ்நாடு, திமுக ஸ்டாலின் ரூ.1000 தருகிறேன் என்கிறார்; எடப்பாடி பழனிசாமி ரூ.1,500 தருகிறேன் என்கிறார்.
முதியோர் உதவித் தொகையை முழுமையாக தரமுடியாதவர்களால் எப்படி, தற்போது அறிவிக்கும் தொகையை தர முடியும். கச்சத்தீவு , காவிரி, மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களுக்கு கையெழுத்திட்டவர்தான் மு.க.ஸ்டாலின். தேர்தலுக்கு பிறகு அதிமுகவை மீட்டெடுப்போம்” என்றார்.
தேர்தல் அறிக்கையில் சிறப்பு அம்சங்கள்:
- நெல் குவிண்டாலுக்கு ரூ.3,000 விவசாயிகளுக்கு வழங்கப்படும்;
- கரும்பு டன்னுக்கு ரூ.4,000 விவசாயிகளுக்கு வழங்கப்படும்;
- கிராமத்தினர் நகரத்தை நோக்கி செல்லாமல் உள்ளூரிலேயே வேலைவாய்ப்பை உருவாக்குவோம்;
- அம்மா கிராமப்புற வங்கிகள் ஏற்படுத்தப்படும்;
- சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும்;
- தமிழ்நாட்டில் வீட்டில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதையும் படிங்க: தேர்தல் களத்தில் கமல்; கோவை தெற்குத் தொகுதியில் போட்டி!