தமிழ்நாடு வக்பு வாரியத்தில் இரண்டு எம்பிக்கள், இரண்டு எம்எல்ஏக்கள், இரண்டு பார் கவுன்சில் உறுப்பினர்கள், இரண்டு முத்தவல்லிகள் என மொத்தம் எட்டு பேர் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களாகவும், நான்கு பேர் அரசின் நியமன உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், 2019ஆம் ஆண்டு செப். 18 அன்று வக்பு வாரியத்தில் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களை விட நியமன உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக கூறி வக்பு வாரியத்தை கலைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
மேலும், தமிழ்நாடு நிதித்துறை செலவின செயலரான சித்திக்கை, வக்பு வாரியத்தின் சிறப்பு அலுவலராக நியமித்து உத்தரவிடப்பட்டது. தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து வழக்கறிஞர் பசலூர் ரஹ்மான் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் வக்பு வாரியத்தில் முத்தவல்லிகள் பிரிவில் தேர்தல் மூலமாக தேர்வு செய்யப்பட்ட எஸ்.செய்யது அலி அக்பர், ஹாஜா கே.மஜீத் ஆகியோரும் இடையீட்டு மனுதாரர்களாக வழக்கு தொடர்ந்தனர்.
அதில், ‘‘பார் கவுன்சில் உறுப்பினர்களில் இஸ்லாமியர்கள் எனும் பட்சத்தில் வக்பு வாரியத்துக்கு நியமிக்கப்பட்ட இஸ்லாமியர்களாக உள்ள இரண்டு மூத்த வழக்கறிஞர்களையும் வக்பு வாரிய சட்டத்தின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களாகவே கருத வேண்டும். அவர்களும் தங்களின் பதவியை ராஜினாமா செய்துவிட்ட நிலையில், வக்பு வாரியத்தை கலைத்தது சட்டவிராதம் என அறிவிக்க வேண்டும். இது தொடர்பாக அரசு பிறப்பித்துள்ள உத்தரவுகளை ரத்து செய்து வக்பு வாரியத்திடமே அதிகாரங்களை ஒப்படைக்க வேண்டும்" என கூறப்பட்டது.
இந்த வழக்கின் இறுதி விசாரணை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது மனுதாரரான பசுலூர் ரஹ்மான் சார்பில் வழக்கறிஞர் எச்.ஆறுமுகம், இடையீட்டு மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் மகமூத் பராச்சர், இ.அப்ரார் முகமது அப்துல்லா, எச்.முகமது கவுஸ் ஆகியோரும், தமிழ்நாடு அரசு சார்பில் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் மற்றும் வக்பு வாரியம் தரப்பில் வழக்கறிஞர் வி.லட்சுமிநாராயணன் ஆகியோரும் ஆஜராகி வாதிட்டனர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வக்பு வாரியத்தில் முறைப்படி தேர்தல் மூலமாக கடந்த 2017ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட எஸ். செய்யது அலி அக்பர், ஹாஜா கே.மஜீத் ஆகியோரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் என்பதால், அவர்களின் சட்டப்படியான உரிமை நிலைநாட்டப்படுகிறது.
எனவே, அவர்கள் பதவியில் இருக்கும்போதே வக்பு வாரியத்தை கலைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருப்பது சட்டவிரோதம் என்பதால் தமிழ்நாடு அரசின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அவர்கள் இருவரையும் தவிர்த்து மற்ற உறுப்பினர்களின் பதவியை நிரப்ப தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்கலாம் என தீர்ப்பளித்தனர்.