சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுக்குழு உறுப்பினர்கள் ஒரே கோரிக்கை ஒற்றைத் தலைமை தான் என்று கூறியதோடு, மீண்டும் பொதுக்குழு கூட்டம் கூட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிதிகளுக்கு புறம்பாக நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்வதாக கூறி ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களுடன் வெளியேறினார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, "அதிமுக ஒருங்கிணைப்பாளராக உள்ள ஓ.பன்னீர் செல்வத்தின் மகனும், மக்களவை உறுப்பினருமான ஓ.பி.ரவீந்திரநாத், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து சிறப்பாக ஆட்சி நடத்துவதாக பாராட்டு தெரிவிக்கிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது ஒருமுறை கூட அவர் சந்தித்து கோரிக்கைகள் வைத்தது இல்லை.
அதுமட்டுமல்லாமல், சட்டமன்றத்தில் ஓபிஎஸ் திமுக அரசை பாராட்டுவதை தொண்டர்கள் விரும்பவில்லை. திமுக அதிமுகவின் முன்னாள் முதலமைச்சர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா மீது தாக்குதல் சம்பவங்கள் நடத்தியது. அவர்களுக்கு எதிராக வழக்குகள் நடத்தியதும் திமுக தான். அப்படியான திமுகவின் ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வரும் நிலையில், களத்தில் நின்று எதிர்க்க வேண்டும் என்றால் அதற்கு இரட்டைத் தலைமை சரியாக இல்லை. ஒற்றைத் தலைமை தான் தேவையாக உள்ளது. ஓபிஎஸ் கட்சியில் இருந்து ஓரங்கப்பட்டப்படவில்லை" எனக் கூறினார்.
இதையும் படிங்க: பேசாதே.. பேசாதே.. ஓபிஎஸ்க்கு எதிராக கோஷம்