சென்னை: சென்னையில் இருந்து தூத்துக்குடி விமானத்தில் சென்ற முதலமைச்சர் ஸ்டாலினை பாராட்டி விமானத்தில் பயணித்த பெண் கவிதை வசனங்களைப் பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கன்னியாகுமரியில் நடைபெறும் காங்கிரஸ் கட்சியின் பாதயாத்திரை பயணத்தை தொடங்கி வைப்பதற்காக இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி சென்று அங்கிருந்து கன்னியாகுமரி செல்வதற்காக புறப்பட்டச்சென்றார்.
இதற்காக சென்னை விமான நிலையத்திலிருந்து தூத்துக்குடி செல்லும் விமானத்தில் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, டி.ஆர். பாலு எம்.பி.உள்ளிட்டோர் உடன் சென்றனர்.
அப்போது விமானத்தில் பயணம் செய்த தனியார் வங்கியின் மேலாளர் கௌசல்யா என்ற பெண் பயணி ஒருவர், முதலமைச்சர் ஸ்டாலினை பாராட்டி கவிதை கூறுவதாக, அவரது பாதுகாவலர்களிடம் அனுமதி கேட்டுள்ளார்.
இதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் அனுமதி அளித்ததை அடுத்து பெண் பயணி அடுக்கடுக்காக கவிதை - வசனங்களை பேசிக்கொண்டு இறுதியில் 'தரணி போற்றும் அளவிற்கு எங்கள் தமிழ்நாட்டை நடத்திச்செல்வது எங்கள் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் ஆற்றலுள்ள அரசு' என்று கூறி முடித்துக்கொண்டார்.
இதனை ஆர்வத்துடன் முழுமையாக கேட்ட முதலமைச்சர் ஸ்டாலின் தனியார் வங்கி மேலாளர் கௌசல்யாவை விமானத்தில் கை கொடுத்துப் பாராட்டினார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இதையும் படிங்க: என்ன செய்ய போகிறார் ஓபிஎஸ்...புதிய நிர்வாகிகளை நியமித்து பொதுக்குழு நடத்த திட்டம்