சென்னை : திமுக சின்னத்தில் நின்று வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தான் திமுகவை சேர்ந்தவன் என விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் இந்திய ஜனநாயக கட்சி பாரிவேந்தர், விடுதலை சிறுத்தைகள் கட்சி ரவிக்குமார், மதிமுக கணேசமூர்த்தி மற்றும் கொங்கு மக்கள் கட்சி சின்னராஜ் ஆகியோர் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.
வழக்கு
இந்நிலையில், ஒரு கட்சியை சார்ந்தவர் வேறு கட்சி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி கட்சி, தலைவர் எம். எல். ரவி வழக்கு தொடர்ந்திருந்தார்.
விசிக அல்ல திமுக
இந்த வழக்கில் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், “கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வேட்பு மனு தாக்கலின் போது தான் ஒரு திமுக உறுப்பினர்; விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினர் அல்ல” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “என்னுடைய வெற்றியை எதிர்த்து தேர்தல் வழக்கு தான் தொடர முடியுமே தவிர, பொது நல வழக்கு தொடர முடியாது. ஆகையால், தனக்கெதிரான இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார்.
மதிமுக நிலை..
முன்னதாக இந்த வழக்கில் மதிமுகவை சேர்ந்த ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, தேர்தலுக்கு முன்னதாகவே தான் மதிமுகவில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்து விட்டதாக பதில் மனு தாக்கல் செய்திருந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : திமுக அரசு சமூக நீதிக்கான அரசு - தொல். திருமாவளவன்