தேமுதிக நிறுவனத் தலைவரும் பொதுச்செயலாளருமான விஜயகாந்துக்கு 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின்போது முதன் முதலாக உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அப்போது சிங்கப்பூர் சென்று தற்காலிக மருத்துவம் எடுத்தபின் தேர்தல் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.
இருப்பினும் தேர்தல் முடிந்தவுடன் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததால் சென்னையில் மருத்துவம் எடுத்துக்கொண்டு முழுமையான மருத்துவத்திற்காக சிங்கப்பூரில் உள்ள குயின் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றார்.
இந்த மருத்துவத்திற்குப் பிறகு அவரது குரல் பாதிக்கப்பட்டது. தைராய்டு பிரச்சினை, தொண்டையில் தொற்று, சிறுநீரகப் பிரச்சினை ஆகிய பாதிப்புகளால் உடல்நிலை மோசமடைந்தது. 2017 முதல் 2018ஆம் ஆண்டுவரை சென்னையில் 10 நாள்கள், பின்பு சிங்கப்பூர், அமெரிக்கா எனப் பல இடங்களில் மருத்துவம் மேற்கொண்டார்.
இந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பு விஜயகாந்த் இன்று சென்னையிலிருந்து மருத்துவப் பரிசோதனைக்காக துபாய் புறப்பட்டார். லண்டனில் உள்ள ஒரு பிரபல மருத்துவர் அவருக்கு நடைப்பயிற்சி, பேச்சுப்பயிற்சி கொடுப்பதற்காக துபாய் செல்கிறார். அங்கு அவருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
அந்தப் பரிசோதனையின் அடிப்படையில் அவர் துபாயிலிருந்து மருத்துவம் பெறுவதா அல்லது லண்டன் சென்று பயிற்சி மேற்கொள்வதா என்பது குறித்து முடிவு எடுக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் மருத்துவத்திற்காக அவர் அமெரிக்கா செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.
துபாய் செல்லும் விஜயகாந்துடன் அவரது இளைய மகன் சண்முக பாண்டியன், அவரது உதவியாளர்கள் குமார், சோமு ஆகியோரும் சென்றனர்.
முன்னதாக துபாய் செல்லும் நபர்கள் கரோனா பரிசோதனைக்குப் பின்னரே விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்ற நிபந்தனை இருப்பதால் விஜயகாந்த் உள்பட அவருடன் துபாய் செல்லும் அனைவரும் பரிசோதனை எடுத்துக்கொண்டனர்.
இதையும் படிங்க: வரலாற்றுச் சாதனை: தங்கம் வென்ற முதல் பெண் அவனி லெகாரா