சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் ரூ.1.56 கோடி மதிப்பீட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலையை இன்று (மே 28) குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு திறந்துவைத்து சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், 'கருணாநிதி தனது சிந்தனை, யோசனை, சித்தாந்தங்களை மக்களிடம் வெளிப்படுத்திய விதம், மிகவும் சிறப்பானது; என்னுடைய இளம்வயதில் அது என்னை கவர்ந்துவிட்டது. எனக்கான அரசியல் பாதையும், கருணாநிதியின் நோக்கங்கள் குறித்த மாறுபட்ட கருத்தும் எனக்கு இருந்தது. ஆனால், கருத்தை அவர் வெளிப்படுத்தி மக்களை கவர்ந்த விதம் என்னையும் அந்த இளம் வயதில் கவர்ந்து விட்டது.
அவருடன் உரையாடுவதற்கான வாய்ப்புகள் எனக்கு கட்சியின் தலைவராக எனக்கு அமைந்தன. நான் தற்போது அரசியலில் இல்லை. அரசியலிலிருந்து விடைபெற்றுவிட்டேன், பொதுவாழ்க்கையில் சோர்வடையவில்லை. அதனால் தான் நாடு முழுவதும் சென்று மக்களை சந்தித்து அவர்களுடன் நேரம் செலவிடுகிறேன். தெளிவான சித்தாந்தம், அதில் பிடிப்பு, அர்ப்பணிப்பு, பக்தி, சுறுசுறுப்பு மற்றும் நல்லொழுக்கம் கொண்டவராக திகழ்ந்தார்.
கருணாநிதி இந்தியாவின் பன்முகத்தன்மை வாய்ந்த முதலமைச்சர்களில் ஒருவர் என்பதை நேர்மையுடன் என்னால் கூறமுடியும். முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்வுக்கு என்னை அழைத்தற்காக தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். சென்னை எனது மனதுக்கு நெருக்கமானது. என்னுடைய வாழ்க்கையிலும் முக்கிய இடம் வகிக்கிறது. என் சொந்த ஊரான நெல்லூருக்கு அருகில் இருப்பதால் ஆழ்ந்த செல்வாக்கு சென்னைக்கு என் மீது உள்ளது.
என்னுடைய நீண்ட பொதுவாழ்க்கையில் கருணாநிதியுடன், பல தசாப்தங்களாக நெருக்கமாக உரையாட வாய்ப்பு கிடைத்தது எனக்கான நல்வாய்ப்பாக கருதுகிறேன். அவருடன் உரையாடுவது, விவாதிப்பது எப்போதுமே சுவாரஸ்யமானது. சில நேரங்களில் கருத்துக்களில் ஆமோதிப்பும், எதிர்ப்பும் எங்களிடையே வந்ததுண்டு. ஆனால், அதே நேரத்தில் மரியாதையுடன்..
ஜனநாயகத்தில் அடிப்படையான தேவை என்னவென்றால் எதிர்க்கருத்துக்களையும், ஏற்றுக்கொள்ள வேண்டும். பொது வாழ்க்கையில் அரசியல்வாதிகள் ஒருவருக்கொருவர் மதிப்பு செலுத்தவேண்டும். அரசியல் கட்சிகள் இதனை கருத்தில் கொள்ளவேண்டும். வேறுவேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் வேறுவேறு சித்தாந்தங்களைக் கொண்டிருப்பார்கள்.
ஆனால், அனைவருமே மக்களுக்காகத்தான் தனித்துவமான வழிகளில் பணியாற்றுகின்றனர்; நாம் ஒருவருக்கொருவர் மதிப்பு செலுத்த வேண்டும். நாம் எதிரிகள் அல்ல; நாம் அரசியல் போட்டியாளர்களே. இதனை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். நவீன அரசியல்வாதிகளுக்கு என்னுடைய அறிவுரை இது.
நீங்கள் எந்த கட்சி சார்ந்தவராகவும் இருக்கலாம் ஆனால் நாம் அனைவரும் இந்த மாபெரும் தேசத்தை சேர்ந்தவர்கள். அனைவரும் மக்களின் நலனுக்காக தனித்துவமான பாதைகளில் பயணிக்கிறோம். எனவே எதிரிகளாக கருதாமல் ஒருவரை ஒருவர் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மாநிலங்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி - வெங்கையா நாயுடு